நிதி மோசடி வழக்கு: ராகுல் காந்தியின் நண்பரிடம் அமலாக்கத்துறை விசாரணை
|நிதி மோசடி வழக்கில் ராகுல் காந்தியின் நண்பரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
புதுடெல்லி,
மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே. பொதுக்கூட்டங்கள் மூலம் வசூலான நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரது பங்கு வர்த்தகம், விருந்து மற்றும் தனிப்பட்ட செலவுகள் அனைத்தும் மிக அதிகமாக இருந்துள்ளது.
இது தொடர்பாக குஜராத் போலீசார் வழக்கு பதிவு செய்து டெல்லியில் கோகலேவை கைது செய்தனர். அவரது வங்கிக் கணக்கில் ஓராண்டில் 23.54 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. இதுகுறித்து, கோகலேவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
சமூக ஊடகப் பணிகள் மற்றும் இதர ஆலோசனைச் சேவைகளுக்காக காங்கிரஸ் கட்சியின் மன்கர் சவாய் இந்தப் பணத்தை வழங்கியதாக அவர் கூறினார். மன்கர் சவாய் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் ஆவார். மேலும் வாய்வழி ஒப்பந்தத்தில் பணம் கொடுக்கப்பட்டதாகவும் கோகலே கூறினார். இதையடுத்து மன்கர் சவாய் அகமதாபாத்துக்கு அழைத்து வரப்பட்டு கோகலே முன்னிலையில் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. ரொக்கமாக பணம் கொடுக்கவில்லை என்று சவாய் கூறினார். விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
பொதுக்கூட்டங்கள் நடத்தி வசூலிக்கும் நிதியை கோகலே அளவுக்கு அதிகமாக செலவு செய்வதாக அமலாக்கத் துறை அகமதாபாத் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை கோகலே மறுத்தார். இந்த சூழலில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் பலரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் என தெரிகிறது.