வீட்டில் புகுந்த அமலாக்கத்துறை: அவசரமாக சுப்ரீம் கோர்ட்டை நாடிய கெஜ்ரிவால்
|அரவிந்த் கெஜ்ரிவாலை எந்த நேரமும் அமலாக்கத்துறை கைது செய்யலாம் எனத் தகவல் வெளியாகும் நிலையில் அவரின் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வருகிறார்.
அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிரான தடைவிதிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அமலாக்கத்துறையின் சம்மனுக்கு தடைவிதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
இதையடுத்து, டெல்லி ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். தான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினால், தன்னை கைது செய்யமாட்டேன் என ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை உறுதி அளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பாதுகாப்பை வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்ததுடன், தற்போதைய சூழலில் தங்களால் எந்த உத்தரவையும் வழங்க முடியாது என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில், 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவாலை எந்த நேரமும் கைது செய்யலாம் எனத் தகவல் வெளியாகும் நிலையில் அவரின் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார். அமலாக்கத்துறை கைதுக்கு தடை விதிக்க மறுத்த டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும், இதனை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால், வழக்கை அவசர வாழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. இதனால், கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நாளை விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருபுறம் முதல் மந்திரி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், மறுபுறம் கைதுக்கு தடை விதிக்கோரி கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.