சீனிவாசப்பூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 120 ஏக்கர் நிலம் மீட்பு
|சீனிவாசப்பூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 120 ஏக்கர் நிலத்தை அதிகாலை 3 மணிக்கே வனத்துறை அதிரடியாக மீட்டது.
சீனிவாசப்பூர்:
சீனிவாசப்பூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 120 ஏக்கர் நிலத்தை அதிகாலை 3 மணிக்கே வனத்துறை அதிரடியாக மீட்டது.
வனத்துறை நிலம் ஆக்கிரமிப்பு
கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தாலுகா ஒலல்கெரேவை சுற்றியுள்ள பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கர் வனத்துறை நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. விவசாயிகள், வன நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்திருந்தனர். சிலர் குடிசைகள் அமைத்து பண்ணை தோட்டமும் அமைத்திருந்தனர்.
இதை அறிந்த கோலார் மாவட்ட வன பாதுகாவலர் ஏழுகொண்டலு தலைமையிலான வனத்துறையினர், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். முதற்கட்டமாக வனத்துறை நிலத்தை ஒப்படைக்கும் படி ஆக்கிரமிப்பாளர்களிடம் அறிவுறுத்தினர். இருப்பினும் ஆக்கிரமிப்பு நிலத்தை அவர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கவில்லை என தெரிகிறது.
வனத்துறை அதிரடி
இதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட வன பாதுகாவலர் ஏழுகொண்டலு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அதிகாலை 3 மணிக்கு 25-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்களுடன் ஒலல்கெரேவுக்கு சென்ற வனத்துறையினர், ஆக்கிரமிப்பில் இருந்த வனத்துறை நிலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மா, வாழை உள்ளிட்ட விளை பயிர்கள் அழிக்கப்படும் ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அதிகாலை நேரத்தில் திடீரென மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை பற்றி விவசாயிகளுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் தெரியவில்லை.
120 ஏக்கர் நிலம் மீட்பு
இதனால் அதிகாரிகள் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகளை மின்னல் வேகத்தில் அகற்றினர். சுமார் 120 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் மீட்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை, ஆக்கிரமிப்பு நிலத்தை வனத்துறையினர் மீட்டதை அறிந்ததும் ஆக்கிரமிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விளை பயிர்கள் நாசப்படுத்தியதற்கு வனத்துறையினருக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.