ஆக்கிரமிப்பு நில மீட்பு விவகாரத்தில் யார் தலையிட்டாலும் வனத்துறை அமைதி காக்காது; அதிகாரி ஏடுகொண்டலு எச்சரிக்கை
|வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் விவகாரத்தில் யார் தலையிட்டாலும் வனத்துறை அமைதியாக இருக்காது என்று அதிகாரி ஏடுகொண்டலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோலார் தங்கவயல்:
வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் விவகாரத்தில் யார் தலையிட்டாலும் வனத்துறை அமைதியாக இருக்காது என்று அதிகாரி ஏடுகொண்டலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆக்கிரமிப்பு
கோலார் மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை தனியார் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அதில் சில விவசாயிகள் விவசாயம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி எழுந்த புகாரின்பேரில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது உறுதியானது.
இதையடுத்து வனத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலங்களை மீட்டனர். அப்போது அவர்கள் விவசாய நிலங்களில் விளைந்திருந்த பயிர்களை அழித்து அந்த நிலங்களை மீட்டதாக கூறப்படுகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பரபரப்பு
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சீனிவாசப்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் வனத்துறையினர் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க சென்றனர். அப்போது விவசாயிகள் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பொக்லைன் எந்திர வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கினர். இதற்கிடையே ஆக்கிரமிப்புகளை மீட்க எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் விஷம் குடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே ஆக்கிரமிப்பாளர்களை கைது செய்ய போலீசாருக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முனிசாமி எம்.பி. உள்பட பா.ஜனதாவினர் 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சீனிவாசப்பூரில் அமைதிக்கு பங்கம் ஏற்படாமல் இருக்க போலீசார் கொடி அணிவகுப்பும் நடத்தினர்.
அமைதியாக இருக்காது
இந்த நிலையில் நேற்று வனத்துறை அதிகாரி ஏடுகொண்டலு கோலாரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சீனிவாசப்பூரில் வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு வருகிறோம். இதில் சில அரசியல்வாதிகள் தலையிட்டு பிரச்சினை கிளப்புகிறார்கள். ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் விவகாரத்தில் யார் தலையிட்டாலும் அதை வனத்துறை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது.
வனத்துறை விட்டு வைக்காது
சில அரசியல்வாதிகள் நில மாபியாக்களுக்கு துணை போகிறார்கள். விவசாயிகளையும் போராட்டத்தில் ஈடுபட தூண்டி விடுகிறார்கள். அத்தகையவர்களை வனத்துறை விட்டு வைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.