'எமர்ஜென்சி ஒரு தவறு, அதை இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார்' - ப.சிதம்பரம்
|எமர்ஜென்சி ஒரு தவறு என்பதை இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975 ஜூன் 25-ந்தேதி எமர்ஜென்சியை அறிவித்தார். அப்போது அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியாவின் கருப்பு நாள் என எதிர்க்கட்சிகள் எமர்ஜென்சியை குறிப்பிடுவார்கள்.
இந்த நிலையில் ஜூலை 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்நிலையில், எமர்ஜென்சி ஒரு தவறு என்பதை இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார் என காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
"பா.ஜ.க. ஏன் இன்னும் பின்னோக்கி 18-வது அல்லது 17-வது நூற்றாண்டு காலத்திற்கு செல்லவில்லை? தற்போது வாழும் சுமார் 75 சதவீத இந்தியர்கள் 1975-க்கு பிறகு பிறந்தவர்கள்தான்.
எமர்ஜென்சி ஒரு தவறு, அதை இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார். இனி யாரும் எளிதில் எமர்ஜென்சியை அறிவிக்க முடியாதபடி அரசியலமைப்பை நாம் மாற்றியிருக்கிறோம்.
எமர்ஜென்சியால் ஏற்பட்ட நன்மை, தீமைகள் குறித்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு விவாதிப்பதால் என்ன பயன் இருக்கிறது? கடந்த காலத்தை பா.ஜ.க. மறக்க வேண்டும். நாம் கடந்த காலத்தில் இருந்து பல பாடங்களை கற்றுக்கொண்டோம்."
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.