< Back
தேசிய செய்திகள்
நாட்டின் வரலாற்றில் அவசர நிலை இருண்ட அத்தியாயம் - பிரதமர் மோடி பேச்சு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

'நாட்டின் வரலாற்றில் அவசர நிலை இருண்ட அத்தியாயம்' - பிரதமர் மோடி பேச்சு

தினத்தந்தி
|
19 Jun 2023 5:55 AM IST

நாட்டின் வரலாற்றில் அவசர நிலை, இருண்ட அத்தியாயம் என்று பிரதமர் மோடி தனது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்தார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தான் பதவி ஏற்ற காலம்தொட்டு அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைதோறும் 'மன்கிபாத்' என்னும் 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசி வருகிறார்.

இந்த மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையின்போது அவர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கிறார். எனவே இந்த முறை ஒரு வாரம் முன்னதாக நேற்று அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார்.

சர்வதேச யோகா தினம்

அப்போது அவர் கூறியதாவது:-

ஜூன் 21-ந் தேதி நெருங்கி வருகிறது. இந்த முறையும் உலகின் மூலை முடுக்கெல்லாம் மக்கள் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட மக்கள் காத்திருக்கிறார்கள். இந்த சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள், ஒரே உலகம், ஒரே குடும்பம் என்ற முறையில் அனைவரின் நலனுக்கான யோகா என்பதுதான். இது யோகாவின் உணர்வை வெளிப்படுத்துகிறது. அனைவரையும் ஒன்றிணைத்து அழைத்துச்செல்கிறது. ஒவ்வொரு முறையையும்போல, இந்த முறையும் நாட்டில் எல்லா இடங்களிலும் யோகா தின நிகழச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

ஐ.நா. தலைமையகத்தில் நான்...

இந்த முறை நியூயார்க் நகரில் ஐ.நா. சபை தலைமையகத்தில் நடைபெறுகிற யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொள்கிற வாய்ப்பினை நான் பெற்றிருக்கிறேன். யோகா தினத்தையொட்டி அபரிமிதமான ஊக்கத்தை நான் சமூக ஊடகத்திலும் பார்க்கிறேன்.

யோகாவை உங்கள் வாழ்வில் பின்பற்றவும், உங்கள் அன்றாட வாழ்வின் அங்கமாக்கிக்கொள்ளவும் உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த உறுதியை எடுத்துக்கொள்வதற்கான மிகப்பெரிய வாய்ப்பாக 21-ந் தேதி அமைகிறது. நீங்கள் யோகாவை அன்றாடம் செய்கிறபோது, அது உங்கள் வாழ்வில் எவ்வளவு பெரிய மாற்றத்தைச் செய்கிறது என்பதைப் பாருங்கள்.

அவசரநிலை, இருண்ட அத்தியாயம்

இந்தியா, ஜனநாயகத்தின் தாய். நாம் நமது ஜனநாயக லட்சியங்களை முதன்மையாகக் கருதுகிறோம். நமது அரசியலமைப்புதான் எல்லாவற்றிலும் பெரியது. எனவே நம்மால் ஜூன் 25-ந் தேதியை மறக்க முடியாது. இந்த நாளில்தான் நமது நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. இது இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயம் ஆகும். லட்சக்கணக்கான மக்கள் இந்த அவசர நிலையை முழு வல்லமையுடன் எதிர்த்தார்கள். அந்த காலகட்டத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் மிகுந்த சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். இன்றைக்கும்கூட, அது மனதைக் கலங்கடிக்கிறது. இந்த சித்ரவதைகள் தொடர்பாக பல்வேறு புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. நானும்கூட 'சங்கார்ஷ் மெய்ன் குஜராத்' ('மோதலில் குஜராத்') என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதும் வாய்ப்பைப் பெற்றேன்.

ஜனநாயகத்தின் அர்த்தம்

சில நாட்களுக்கு முன்பாக அவசர நிலை பற்றிய 'டார்ச்சர் ஆப் பொலிடிக்கல் பிரிசனர்ஸ் இன் இந்தியா' ('இந்தியாவில் அரசியல் கைதிகள் சித்ரவதை') என்ற புத்தகத்தை வாசித்தேன். இநதப்புத்தகம், அவசர நிலையின்போது வெளியானது. இது, அந்தக் காலகட்டத்தில் ஜனநாயகக் காவலர்களை மிகக்கொடூரமாக அரசு நடத்திய விதத்தை விவரித்துள்ளது. இந்தப் புத்தகத்தில் பலரது அனுபவங்களும், படங்களும் இடம்பெற்றுள்ளன.

இன்றைக்கு நாம் சுதந்திரத்தின் அமிர்தப்பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். நாட்டின் சுதந்திரத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய குற்றங்களையும் நாம் பார்க்க வேண்டும். அப்போதுதான் இதன் மூலம் இன்றைய இளம்தலைமுறையினர் ஜனநாயகத்தின் அர்த்தத்தையும், முக்கியத்துவத்தையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

'பிபர்ஜாய்' புயல்

பிரதமர் மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், சமீபத்தில் 'பிபர்ஜாய்' புயலால் குஜராத்தில் கட்ச் பகுதி மக்கள் சந்தித்த இயற்கைப்பேரழிவை நினைவு கூர்ந்தார். அவர் இயற்கைப் பேரழிவுகளை கையாள்வதற்கான திறனை இந்தியா பெருக்கிக்கொண்டிருப்பதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், "20 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட பூகம்பத்துக்குப் பின்னர் பேரழிவில் இருந்து கட்ச் மீளுமா என்று மக்கள் சந்தேகம் எழுப்பினர். ஆனால் கட்ச் மக்கள் அந்தப் பேரழிவில் இருந்து மீண்டனர். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் பேரிடர் மேலாண்மைத் திறன் பெருகி இருக்கிறது. இது உதாரணமாகவே அமைந்துள்ளது" என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்