கோவில் விழாவில் ஆக்ரோஷமாக மோதிய யானைகள்: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
|யானை மிரண்டு ஓடியதால் பக்தர்கள் பீதி அடைந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
திருச்சூர்,
கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஆராட்டுப்புழாவில் அய்யப்பன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் பூரம் திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் உபசாரம் சொல்லல் என்ற நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக ரவிகிருஷ்ணன், அர்ஜுனன் ஆகிய 2 யானைகள் அழைத்து வரப்பட்டன. நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் இரு யானைகளும் கோவிலை நோக்கி ஊர்வலமாக வந்துகொண்டிருந்தது.
அப்போது ரவிகிருஷ்ணன் யானை திடீரென மிரண்டது. தொடர்ந்து அங்கும், இங்கும் ஓட தொடங்கியது. இதனால் யானை மீது அமர்ந்திருந்த கீழ் சாந்திகள் சிலர் கீழே குதித்து உயிர் தப்பினர். மேலும் யானை மீது இருந்த குடை, ஆலவட்டம் உள்ளிட்டவை கீழே விழுந்தது. யானை மிரண்டு ஓடியதால் பக்தர்கள் பீதி அடைந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிலர் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர்.
இதையடுத்து ரவிகிருஷ்ணன் யானையும், எதிரே நின்றிருந்த அர்ஜுனன் யானையும் ஒன்றோடொன்று ஆக்ரோஷமாக மோதி தாக்கிக்கொண்டன. இதனால் அர்ஜுனன் யானை மீது இருந்த கீழ் சாந்திகள் கீழே விழுந்தனர். தொடர்ந்து ரவிகிருஷ்ணன் யானையை கட்டுப்படுத்த முயன்ற பாகன் ஸ்ரீகுமாருக்கு படுகாயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆராட்டுப்புழா போலீசார், வனத்துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி ரவிகிருஷ்ணன் யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.