< Back
தேசிய செய்திகள்
சக்லேஷ்புரா, பேளூர் தாலுகாக்களில் 70 காட்டுயானைகள் கூட்டமாக புகுந்து அட்டகாசம்
தேசிய செய்திகள்

சக்லேஷ்புரா, பேளூர் தாலுகாக்களில் 70 காட்டுயானைகள் கூட்டமாக புகுந்து அட்டகாசம்

தினத்தந்தி
|
16 Aug 2022 4:19 PM GMT

சக்லேஷ்புரா, பேளூர் தாலுகாக்களில் 70 காட்டுயானைகள் கூட்டமாக புகுந்து அட்டகாசம் செய்தன. அவைகள் பயிர்களை நாசப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

ஹாசன்:

சக்லேஷ்புரா, பேளூர் தாலுகாக்களில் 70 காட்டுயானைகள் கூட்டமாக புகுந்து அட்டகாசம் செய்தன. அவைகள் பயிர்களை நாசப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

காட்டுயானைகள்

ஹாசன் மாவட்டத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சக்லேஷ்புரா தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் காட்டுயானைகளின் தொல்லை மிகவும் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சக்லேஷ்புராவுக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கூட்டமாக வெளியேறின. அவைகள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள பைகெரே, சார்வேபேட்டே, மூதலாதகடே ஆகிய கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன.

அங்கிருந்த காபி தோட்டங்களில் புகுந்து காபி செடிகளை தும்பிக்கையால் பிடுங்கி தின்றும், எறிந்தும், காலால் மிதித்து நாசப்படுத்தின. மேலும் வாழை தோட்டம் மற்றும் விவசாய நிலங்களுக்குள்ளும் அவைகள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தின. இதில் கிட்டப்பா, சந்திரேகவுடா, மல்லேஷ் உள்பட ஏராளமான விவசாய நிலங்கள் நாசமாகின. பின்னர் அவைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. பயிர்களை நாசப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

அட்டகாசம்

இதேபோல் பேளூர் தாலுகாவிற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கூட்டமாக வெளியேறின. அவைகள் இரை மற்றும் தண்ணீர் தேடி பேளூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுலகலலே மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. அங்கிருந்த காபித்தோட்டம், வாழைத்தோட்டம், தென்னை மர தோட்டம் என விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. குறிப்பாக தேவராஜ், ஜெகதீஷ், கெம்பேகவுடா, ராமசந்திரா ஆகியோரின் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடங்களுக்கு நேற்று காலையில் சென்று பார்வையிட்டனர். அப்போது அவர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காட்டுயானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

போராட்டம்

அவர்களின் கோரிக்கையை ஏற்ற வனத்துறையினர் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் காட்டுயானைகளின் அட்டகாசத்தை நிரந்தரமாக தடுக்க வலியுறுத்தி கிராம பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனுவும் கொடுத்தனர்.

மேலும் செய்திகள்