திருமண போட்டோஷூட்டில் பாகனை தலைகீழாக தூக்கிய யானை! அலறியடித்து ஓடிய மணமக்கள்!! வைரல் வீடியோ
|அங்கிருந்த யானை பாகனை தலைகீழாக தூக்கியது.
குருவாயூர்,
கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில், புதிதாக திருமணம் செய்து கொண்ட கேரள ஜோடி ஒன்று திருமண போட்டோஷூட் நடத்தினர். அங்கு அவர்கள் சற்று வித்தியாசமாக புகைப்படங்களை எடுக்க விரும்பியுள்ளனர்.
இதற்காக அங்கிருந்த யானை முன் நின்றபடி போட்டோஷூட் நடத்த முடிவு செய்தனர். கேமராமேன், புது ஜோடி நடந்து சென்று யானையின் முன்னால் நிற்பதை பதிவு செய்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில், போட்டோஷூட் நடக்கும்போது, புதுமணத் தம்பதியின் பின்னால் நின்று கொண்டிருந்த யானை, திடீரெனக் கிளர்ந்தெழுந்து, ஆவேசமாகத் தன் பக்கத்தில் நின்றிருந்த பாகனை அலேக்காக தூக்கி சென்றது. அவரை தலைகீழாக தூக்கிய யானையிடமிருந்து அந்த பாகன் காயமின்றி தப்பினார். ஆனால் அவரது வேட்டியை (உடம்பின் மேல் போர்த்தியிருந்தது) அந்த யானை ஆக்ரோஷத்துடன் உருவி வீசியது.
அங்கிருந்தவர்கள் மதம் பிடித்த யானையின் இந்த செயலை சற்றும் எதிர்பார்க்காததால் அலறியடித்து ஓடினர். இதனிடையே, யானையின் மேல் இன்னொரு பாகன் அமர்ந்திருந்தார். அவர் யானையை தட்டிக்கொடுத்து சாந்தப்படுத்தினார்.யானை அமைதியடைந்ததையடுத்து கோவில் வளாகம் அருகே யானையை கயிற்றால் கட்டி வைத்தனர்.
கடந்த மாதம் நடந்த இச்சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தங்களது திகில் அனுபவத்தை அந்த தம்பதியினர் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மணமகன் அந்த வீடியோவில் கூறியதாவது, "நாங்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்தோம். திடீரென அனைவரும் அலறியடித்து ஓடினர். அவள்(மணமகள்) என் கையைப் பிடித்துக்கொண்டு ஓடினாள். யானைகளை நாம் காயப்படுத்தினால் மட்டுமே அவை எதிர்வினையாற்றும்" என்றார்.