< Back
தேசிய செய்திகள்
காட்டு யானை தாக்கி விவசாயி சாவு
தேசிய செய்திகள்

காட்டு யானை தாக்கி விவசாயி சாவு

தினத்தந்தி
|
16 Sept 2023 3:19 AM IST

சரகூரு அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார்.

மைசூரு:

சரகூரு அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார்.

விவசாயி

மைசூரு மாவட்டம் சரகூரு தாலுகா சின்னங்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரா (வயது 40). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம், வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. மகேந்திரா தனது தோட்டத்தில் பருத்தி பயிரிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை மகேந்திரா மற்றும் தொழிலாளர்கள் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், வனப்பகுதியில் இருந்து வெளியேறி காட்டு யானை பருத்தி தோட்டத்துக்குள் புகுந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகேந்திரா மற்றும் தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

காட்டு யானை தாக்கி சாவு

அந்த காட்டு யானை அவர்களை பின்தொடர்ந்து விரட்டியது. ஒரு கட்டத்தில் மகேந்திரா கால் தவறி கீழே விழுந்தார். அப்போது காட்டு யானை அவரை தும்பிக்கையால் தூக்கி வீசியதுடன், காலால் மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே மகேந்திரா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சிறிது நேரம் அங்கேயே சுற்றி வந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினரும் சரகூரு போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் காட்டு யானை தாக்கி உயிரிழந்த மகேந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கிராம மக்கள் கோரிக்கை

அப்போது அந்தப்பகுதி மக்கள், வனத்துறையினரை சூழ்ந்துகொண்டு, காட்டு யானை அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற வனத்துறையினர் உயிரிழந்த விவசாயி மகேந்திராவின் குடும்பத்துக்கு தக்க நிவாரணம் வழங்கப்படும் என்றனர்.

மேலும் காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதுகுறித்து சரகூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்