மின்னணு வாக்கு எந்திரங்களை 'ஹேக்' செய்ய முடியும்: எலான் மஸ்க் கருத்துக்கு டி.கே.சிவக்குமார் ஆதரவு
|எலான் மஸ்க்கின் கருத்தை ஆதரிப்பதாக கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று உலக பணக்காரரும், எக்ஸ் தள உரிமையாளருமான எலான் மஸ்க் கூறினார். இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். இதை முன்னாள் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் மறுத்தார். இது குறித்த விவாதம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நாட்டின் சில பகுதிகளில் தேர்தல் குறித்து நடைபெறும் நிகழ்வுகளுக்கும், எலான் மஸ்க்கின் கருத்துக்கும் தொடர்பு உள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றி தற்போது சில பகுதிகளில் வெளிவரும் தகவல்கள் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் உண்மை நிலை என்ன என்பது உலகிற்கு புரிந்துள்ளது. எலான் மஸ்க்கின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். எலான் மஸ்க் தொழில்நுட்ப நிபுணர் என்பதை இந்த உலகமே ஒப்புக் கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.