< Back
தேசிய செய்திகள்
மக்கள் கடும் எதிர்ப்பு எதிரொலி: கர்நாடகத்தில் மின் கட்டண உயர்வு வாபஸ் ஆகிறது?
தேசிய செய்திகள்

மக்கள் கடும் எதிர்ப்பு எதிரொலி: கர்நாடகத்தில் மின் கட்டண உயர்வு வாபஸ் ஆகிறது?

தினத்தந்தி
|
4 Oct 2022 12:15 AM IST

மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கர்நாடகத்தில் மின்கட்டண உயர்வை வாபஸ் பெற அரசு முடிவு செய்து, அதுபற்றி தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

பெங்களூரு:

மின் கட்டணம் உயர்வு

கர்நாடகத்தில் 6 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதமும், கடந்த ஜூன் மாதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நிலக்கரி விலை உயர்வு, மின்சார கொள்முதல் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஒரு வாரத்திற்கு பின்பு மாநிலம் முழுவதும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்த மின் கட்டண உயர்வு கடந்த 1-ந் தேதியில் இருந்துஅமலுக்கு வந்தது. அதாவது யூனிட்டுக்கு 23 பைசாவில் இருந்து 43 பைசா வரை உயர்த்தப்பட்டு இருந்தது. மின் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சி தலைவர்களான சித்தராமையா, குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கு வலியுறுத்தினாா்கள். ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வரும் நிலையில் மின் கட்டணமும் உயர்த்தப்பட்டதால், மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானாா்கள்.

திரும்ப பெற அரசு முடிவு

அத்துடன் மின் கட்டண உயர்வுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாா்கள். மேலும் அடிக்கடி மின் கட்டணம் உயர்த்தப்படுவதற்கு கடும் எதிப்பும் கிளம்பியது. இந்த நிலையில், மின் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால், மின் கட்டண உயர்வை திரும்ப பெற அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் ஆலோசனை நடத்திவிட்டு, மின் கட்டண உயர்வை திரும்ப பெற தீர்மானிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றி மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் நிருபர்களிடம் கூறுகையில், மாநிலத்தில் மின் கட்டண உயர்வு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி அரசின் கவனத்திற்கும் வந்துள்ளது. மின் கட்டண உயர்வு விவகாரம் குறித்து தசரா பண்டிகைக்கு பின்பு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் ஆலோசனை நடத்திவிட்டு, உரிய முடிவு எடுக்கப்படும், என்றார்.

மேலும் செய்திகள்