எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில் மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல்...!
|எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில் மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே.சிங் இன்று தாக்கல் செய்தார்.
மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், அறிமுக நிலையிலேயா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பல எதிர்ப்புகளை மீறி தற்போது மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க சட்டத்திருத்தம், குறைந்தபட்சம், அதிகபட்ச மின்கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.
உற்பத்தி செலவுக்கு இணையாக கட்டணம் இருந்தால் விநியோக நிறுவனங்களை சிறப்பாக நடத்த முடியும் என மசோதா கூறுகிறது. மானியத்தை கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் முக்கிய அம்சமாக உள்ளது.
மேலும் மின்சார சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.