< Back
தேசிய செய்திகள்
இதுவரை ரூ.16,000 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை.. பா.ஜ.க.வுக்கு வந்தது மட்டும் இவ்வளவு தொகையா..?
தேசிய செய்திகள்

இதுவரை ரூ.16,000 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை.. பா.ஜ.க.வுக்கு வந்தது மட்டும் இவ்வளவு தொகையா..?

தினத்தந்தி
|
15 Feb 2024 6:15 PM IST

தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் ஸ்டேட் வங்கி வழங்கவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி:

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்காக மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை கொண்டு வந்தது. ரொக்கமாக நன்கொடை அளிக்கும் நடைமுறையை மாற்றுவதற்கும், அரசியல் நிதியளிப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும் ஒரு தீர்வாக இந்த திட்டம் கருதப்பட்டது.

ஆனால், இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. அரசியல் சாசனத்திற்கு எதிரான இந்த தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது என்று கூறிய நீதிபதிகள், தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் நிறுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் ஸ்டேட் வங்கி வழங்கவேண்டும், ஸ்டேட் வங்கி பகிர்ந்து கொள்ளும் தகவல்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மார்ச் 13ம் தேதிக்குள் வெளியிடவேண்டும், என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து இதுவரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மற்றும் அவற்றின் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் வழங்கிய தகவல்கள் வருமாறு:-

மார்ச் 2018 முதல் ஜனவரி 2024 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் பத்திரங்கள் விற்பனையின் மூலம் மொத்தம் ரூ.16,518.11 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

சராசரியாக, அரசியல் கட்சிகளால் பெறப்பட்ட மொத்த நன்கொடைகளில் பாதிக்கும் அதிகம் தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் சில மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் மாநில கட்சிகள் 90 சதவீதத்திற்கும் அதிகமாக தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளன. பா.ஜ.க.வை பொருத்தவரை தேர்தல் பத்திரங்கள் அதன் மொத்த வருமானத்தில் பாதிக்கும் அதிகம் ஆகும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின்போது காங்கிரஸ் கட்சி அதிக நன்கொடை வசூலுடன் பணக்கார கட்சியாக இருந்தது. ஆட்சியின் கடைசி ஆண்டிலிருந்து காங்கிரசை பின்னுக்குத் தள்ளி நாட்டின் பணக்காரக் கட்சியாக பா.ஜ.க. மாறியது. 2013-14 நிதியாண்டில் காங்கிரசின் மொத்த வருமானம் ரூ.598 கோடியாகவும், பா.ஜ.க.வின் மொத்த வருமானம் ரூ.673.8 கோடியாகவும் இருந்தது.

அதன்பின்னர், பா.ஜ.க.வின் வருமானம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வருமானம் சரிவடைந்தது. இடையில் சில ஆண்டுகள் மட்டும் வருமானம் சற்று உயர்ந்தது. தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்ட முதல் நிதியாண்டில், பா.ஜ.க.வின் வருமானம் இரு மடங்காக உயர்ந்தது. அதாவது ரூ.1,027 கோடியில் இருந்து ரூ.2,410 கோடியாக அதிகரித்தது. காங்கிரசின் வருமானம் ரூ.199 கோடியில் இருந்து ரூ.918 கோடி என்ற அளவில் கணிசமாக உயர்ந்தது.

கடந்த நிதியாண்டில் (2022-23) பா.ஜ.க.வின் மொத்த வருமானம் ரூ.2,360 கோடியாக இருந்தது. இதில், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக கிட்டத்தட்ட ரூ.1,300 கோடி வருமானம் வந்துள்ளது. அதே ஆண்டு, காங்கிரசின் வருமானம் ரூ.452 கோடியாக சரிந்தது. தேர்தல் பத்திரங்கள் வாயிலாக ரூ.171 கோடி வந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் ரூ.325 கோடியும், பாரத ராஷ்டிர சமிதி ரூ.529 கோடியும், தி.மு.க. ரூ.185 கோடியும், பிஜு ஜனதா தளம் ரூ.152 கோடியும், தெலுங்கு தேசம் கட்சி ரூ.34 கோடியும் பெற்றன. சமாஜ்வாடி கட்சி, ஷிரோமணி மகாலி தளம் ஆகிய கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்களின் மூலம் எந்த நிதியும் கிடைக்கவில்லை.

தேர்தல் பத்திரங்கள் மூலமாக வந்த நிதியில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வந்துள்ளன.

2017-18 முதல் 2022-23 வரையிலான அரசியல் கட்சிகளின் வருடாந்திர தணிக்கை அறிக்கையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட கட்சி வாரியான நன்கொடைகள் குறித்த விவரம் இடம்பெற்றிருப்பதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் பா.ஜ.க.வுக்கு ரூ.6,566.11 கோடியும், காங்கிரசுக்கு ரூ.1,123.3 கோடியும் கிடைத்துள்ளது. அதே காலகட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1,092.98 கோடி பெற்றுள்ளது.

நடப்பு 2023-24 நிதியாண்டிற்கான கட்சி வாரியான தரவு, தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்த பிறகு வெளியாகும்.

மேலும் செய்திகள்