< Back
தேசிய செய்திகள்
தேர்தல் பத்திர விவரங்களை சமர்பித்தது எஸ்.பி.ஐ
தேசிய செய்திகள்

தேர்தல் பத்திர விவரங்களை சமர்பித்தது எஸ்.பி.ஐ

தினத்தந்தி
|
12 March 2024 6:41 PM IST

அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்தில் எஸ்.பி.ஐ வங்கி சமர்பித்துள்ளது.

புதுடெல்லி,

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை ரத்து செய்து கடந்த மாதம் 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு உத்தரவிட்டது. தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றைபணமாக்கிய அரசியல் கட்சிகள், நன்கொடை தொகை உள்ளிட்ட விவரங்களை மார்ச் 6-ந் தேதிக்குள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.

ஆனால், இதை செயல்படுத்த நிறைய காலஅவகாசம் தேவைப்படும் என்றும், எனவே, ஜூன் 30-ந் தேதி வரை காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் பாரத ஸ்டேட் வங்கி கடந்த 6-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. கோர்ட்டு உத்தரவுக்கு கீழ்ப்படியாத அவ்வங்கிக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி, ஒரு தொண்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுக்கள், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது ஸ்டேட் வங்கியின் கோரிக்கையை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி, இன்று மாலை 5 மணியளவில் எஸ்.பி.ஐ வங்கி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பித்ததது.

மேலும் செய்திகள்