ஜூன் 30-க்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல்; மத்திய மந்திரி அறிவிப்பு
|இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கான தேர்தல் வருகிற 30-ந்தேதிக்குள் நடைபெறும் என மத்திய மந்திரி அனுராக் தாக்குர் அறிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான, பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தெரிவித்து, கடந்த ஏப்ரல் 23-ந்தேதியில் இருந்து டெல்லி ஜந்தர் மந்தரில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், சரண் சிங்குடன், பயிற்சியாளர்கள் சிலர் மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உதவி செயலாளர் வினோத் தோமர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில், 125 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவர்களில் 4 பேர் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை உறுதி செய்து உள்ளனர்.
அவர்களில் ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர். ஒருவர் காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்றவர். இதுதவிர, சர்வதேச நடுவர் மற்றும் மாநில அளவிலான பயிற்சியாளர் என மொத்தம் 4 பேர் சரண் சிங்குக்கு எதிராக சாட்சியங்களை உறுதி செய்தனர்.
பாலியல் வழக்கு தொடர்பாக பிரிஜ் பூஷணிடம் டெல்லி போலீசார் இதுவரை 2 முறை விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக, நாட்டுக்காக வாங்கிய பதக்கங்களை கங்கை நதியில் வீச வீரர், வீராங்கனைகள் முயற்சித்தனர். ஆனால், விவசாய சங்கத்தினர் தலையிட்டு பதக்கங்களை கங்கையில் வீசும் முயற்சியை தடுத்து நிறுத்தினர்.
அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.
இதனை ஏற்று கொண்ட மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயித், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குரை, அவரது வீட்டில் சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில், அவரிடம் மல்யுத்த வீராங்கனைகள் 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து உள்ளனர் என கூறப்படுகிறது. இதில், உடன்பாடும் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
இதுபற்றி புனியா கூறும்போது, ஜூன் 15-ந்தேதிக்குள் போலீஸ் விசாரணை முடிவடையும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மல்யுத்த வீரர்களுக்கு எதிரான அனைத்து எப்.ஐ.ஆர்.களையும் திரும்ப பெற வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி உள்ளோம். அதற்கு அவர் ஒப்புக்கொண்டார் என கூறியுள்ளார்.
ஜூன் 15-ந்தேதி வரை எந்தவித போராட்டங்களையும் நடத்த மாட்டோம் என மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் கூறினார். ஜூன் 15-ந்தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்றார்.
இதனை தொடர்ந்து மத்திய மந்திரி அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் 6 மணிநேரம் ஆலோசனை நடத்தினேன்.
ஜூன் 15-ந்தேதிக்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அவர்களிடம் நாங்கள் உறுதி கூறியுள்ளோம். ஜூன் 30-ந்தேதிக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கான தேர்தல் நடத்தப்படும்.
பெண் ஒருவர் தலைமையில், மல்யுத்த கூட்டமைப்பில் உள்மட்ட அளவில் புகார் குழு ஒன்றும் அமைக்கப்படும். மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு எதிரான அனைத்து எப்.ஐ.ஆர். பதிவுகளும் வாபஸ் பெறப்படும்.
3 முறை பதவியை நிறைவு செய்த பிரிஜ் பூஷண் சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட கூடாது என அவர்கள் வேண்டுகோளாக கேட்டு கொண்டனர். ஜூன் 15-ந்தேதிக்கு முன்பு அவர்கள் போராட்டம் எதிலும் ஈடுபட மாட்டார்கள் என கூறியுள்ளார்.