< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ் தலைவர் தேர்தல்; அனைத்து இடங்களிலும் 90% வாக்கு பதிவு:  மதுசூதன் மிஸ்திரி அறிவிப்பு
தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் தேர்தல்; அனைத்து இடங்களிலும் 90% வாக்கு பதிவு: மதுசூதன் மிஸ்திரி அறிவிப்பு

தினத்தந்தி
|
17 Oct 2022 6:35 PM IST

உள்கட்சி ஜனநாயகம் என்றால் என்னவென்று காங்கிரஸ் வெளிப்படுத்தி உள்ளது என அக்கட்சியின் மத்திய தேர்தல் அமைப்பு தலைவர் மதுசூதன் மிஸ்திரி கூறியுள்ளார்.



புதுடெல்லி,


காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 22 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில், காந்தி-நேரு குடும்பத்தில் இருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை.

24 ஆண்டுகளுக்கு பிறகு அந்த குடும்பத்தில் இருந்து வராத ஒருவர் இன்றைய தேர்தல் மூலம் தலைவர் நாற்காலியை அலங்கரிக்கப்போகிறார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குபதிவு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொடங்கியது. தமிழகத்தில் இருந்து மொத்தம் 211 கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாக்களித்தனர். இதேபோன்று நாடு முழுவதும் அமைக்கப்பட்ட வாக்கு மையங்களில் வாக்கு பதிவு நடந்தது.

இந்நிலையில், கார்கே அல்லது சசி தரூர் என்ற இருவரில் யார் அடுத்த தலைவர் என்ற போட்டிக்கான வாக்கு பதிவு இன்று மாலை நிறைவடைந்து உள்ளது. அக்டோபர் 19-ந்தேதி (நாளை மறுநாள்) வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றவர் யாரென்ற முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதுபற்றி அக்கட்சியின் மத்திய தேர்தல் அமைப்பு தலைவர் மற்றும் முன்னாள் எம்.பி.யான மதுசூதன் மிஸ்திரி கூறும்போது, மொத்தமுள்ள 9,900 பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களில் 9,500 பேர் இன்று வாக்களித்து உள்ளனர். மாநிலங்கள் முழுவதும் 96% வாக்கு பதிவு நடந்து உள்ளது.

அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. டெல்லியில் இதுவரை 3 வாக்கு பெட்டிகள் பெறப்பட்டு உள்ளன. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் 87 மக்கள் வாக்களித்து உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

சிறு மாநிலங்களில் ஏறக்குறைய 100 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அனைத்து இடங்களிலும் 90 சதவீதத்திற்கும் கூடுதலாக வாக்கு பதிவாகி உள்ளது.

இதில் எங்களுக்கு அதிக திருப்திக்குரிய விசயம் என்னவெனில், அனைத்து மாநிலங்களிலும் வாக்கு சாவடி அமைக்கப்பட்ட பகுதிகளில், விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் அறியப்படவில்லை. இது ஒரு பெரிய சாதனை. தேர்தல் வெளிப்படையான நடைமுறையில், அமைதியான முறையில் நடந்து முடிந்து உள்ளது என அவர் கூறியுள்ளார்.

உள்கட்சி ஜனநாயகம் என்றால் என்னவென்று, காங்கிரஸ் கட்சியால் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் இருந்து பிற கட்சிகளும் பாடம் கற்று கொள்ள வேண்டும். கற்று கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவருக்கான இந்த தேர்தலில் ரகசிய முறையில் வாக்கு பதிவு நடந்து உள்ளது. அதனால், யாருக்கு யார் வாக்களித்தனர் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் ஒருவருக்கும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்