< Back
தேசிய செய்திகள்
இறைச்சிக்காக கடத்தப்பட்ட நிலையில் கன்டெய்னர் கவிழ்ந்து விபத்து; 7 மாடுகள் ெசத்தன
தேசிய செய்திகள்

இறைச்சிக்காக கடத்தப்பட்ட நிலையில் கன்டெய்னர் கவிழ்ந்து விபத்து; 7 மாடுகள் ெசத்தன

தினத்தந்தி
|
18 May 2023 3:12 AM IST

சென்னராயப்பட்டணா அருகே மாடுகள் கடத்தி சென்ற கன்டெய்னர் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 7 மாடுகள் செத்தன. 33 மாடுகளை போலீசார் மீட்டனர்.

ஹாசன்:

சென்னராயப்பட்டணா அருகே மாடுகள் கடத்தி சென்ற கன்டெய்னர் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 7 மாடுகள் செத்தன. 33 மாடுகளை போலீசார் மீட்டனர்.

மாடுகள் கடத்தல்

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா இரேசாவே கிராமத்தில் இருந்து சட்டவிரோதமாக மாடுகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இரேசாவே பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கன்டெய்னர் ஒன்று சோதனை சாவடி வழியாக அதிவேகத்தில் வந்தது. இதை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த கன்டெய்னரை மடக்கினர். ஆனால் டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக ஓட்டி சென்றார்.

இருப்பினும் போலீசார் விடவில்லை அந்த கன்டெய்னரை பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் கன்டெய்னர் டிரைவர் அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டி சென்றார். இந்தநிலையில் பேடரஹள்ளி பகுதியில் சென்றபோது, திடீரென்று கன்டெய்னர் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. இதை பார்த்த டிரைவர் வேகத்தை குறைத்து கன்டெய்னரை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர முயற்சித்தார். ஆனால் நிற்காமல் சென்ற கன்டெய்னர், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

7 மாடுகள் செத்தன

இதையடுத்து கன்டெய்னர் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்த விபத்தை பார்த்த போலீசார் அருகே சென்று, கன்டெய்னரை திறந்து பார்த்தனர். அப்போது அங்கு 40 மாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. கவிழ்ந்த வேகத்தில் அதில் 7 மாடுகள் செத்தன. மீதமுள்ள 33 மாடுகளுக்கு காயம் ஏற்பட்டது.

இதை பார்த்த போலீசார் கால்நடை டாக்டர்களை வரவழைத்து, உடனே அந்த மாடுகளை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த மாடுகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த மாடுகள் அனைத்தும் இறைச்சிக்காக கடத்தப்பட்டதாக தெரியவந்தது.

3 பேர் மீது வழக்கு பதிவு

இந்த நிலையில் இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிராம் சங்கர் கூறியதாவது:- இரேசாவே பகுதியில் இருந்து மாடுகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சோதனை சாவடி அமைத்து வாகனங்களின் நடமாட்டத்தை கண்காணித்தனர். அப்போது ஒரு கன்டெய்னர் வாகனம் மட்டும் நிற்காமல் சென்றது. அந்த வாகனத்தை போலீசார் துரத்தி சென்றனர்.

பேடரஹள்ளி அருகே அந்த வாகனம் கவிழ்ந்தது. இந்த கன்டெய்னரில் 40 மாடுகள் இருந்தன. அதில் 7 மாடுகள் இறந்துவிட்டனர். இந்த மாடுகளை எங்கு கடத்தி செல்கிறார்கள்? யாருடையது? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட 33 மாடுகள் கோசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாடு கடத்தலில் ஈடுபட்டதாக டிரைவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்