சட்டசபை தேர்தலின் போது நடந்த அசம்பாவிதங்கள்; கர்நாடகம் முழுவதும் 12 போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு
|சட்டசபை தேர்தலின்போது நடந்த அசம்பாவிதங்கள் தொடர்பாக கர்நாடகம் முழுவதும் பன்னிரெண்டு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றிருந்தது. ஒரு சில அசம்பாவிதங்களை தவிர்த்து மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றிருந்தது. குறிப்பாக விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேவாடி அருகே மசபினாலே கிராமத்தில் மட்டும் தேர்தல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருந்ததுடன், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையும் கிராம மக்கள் உடைத்திருந்தனர். மற்றபடி அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் மோதல் உள்ளிட்ட சிறிய அளவிலான அசம்பாவிதங்களே நடைபெற்றிருந்தது.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலின் போது நடந்த அசம்பாவித சம்பவங்கள் தொடர்பாக மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மசபினாலே கிராமத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 23 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். மற்றவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுபோல், மற்ற அசம்பாவிதங்களில் ஈடுபட்டவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.