சமுதாயத்தை உடைப்பது தான் பா.ஜனதாவின் நோக்கம்; மல்லிகார்ஜுன கார்கே தாக்கு
|சமுதாயத்தை உடைப்பது தான் பா.ஜனதாவின் நோக்கம் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
ராய்ச்சூர்:
சமுதாயத்தை உடைப்பது தான் பா.ஜனதாவின் நோக்கம் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
சோனியா காந்தி
கர்நாடக சட்டசபை தோ்தலையொட்டி ராய்ச்சூர் மாவட்டம் சுரபுரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசியதாவது:-
நான் குஜராத்திற்கு சென்று அங்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டேன். அங்கு பிரதமர் பேசும்போது, நான் இந்த மண்ணின் மகன் என்று பேசினார். நான் சொல்கிறேன், நான் இந்த மண்ணின் மகன். இது நான் பிறந்த மண். இன்று நான் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உயர்ந்துள்ளேன். சோனியா காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் அனைவரும் சேர்ந்து என்னை கட்சியின் தலைவர் பதவியில் அமர்த்தியுள்ளனர்.
வேலை வழங்கவில்லை
இந்த பதவியின் மரியாதையை நீங்கள் காப்பாற்ற வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை அமைய நீங்கள் ஆசிர்வதிக்க வேண்டும். இதன் மூலம் எனது மரியாதையை காக்க வேண்டும். உள்துறை மந்திரி அமித்ஷா இங்கு வந்து பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த பகுதியின் வளர்ச்சிக்கு அவர் என்ன செய்தார்?. இங்கு புதிதாக எந்த தொழில் நிறுவனங்களும் தொடங்கப்படவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்கவில்லை.
கர்நாடக அரசின் துறைகளில் 2½ லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக அதிகரிப்பதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கவில்லை. சமுதாயத்தை உடைப்பது தான் பா.ஜனதாவின் நோக்கம். சமுதாயத்தை முன்னேற்றும் பணியை பா.ஜனதா எப்போதும் செய்தது இல்லை.
விலைவாசி உயர்வு
அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்தால் நமக்கு சம உரிமைகள் கிடைத்துள்ளன. இந்த அரசியல் சாசனத்தை அமல்படுத்தியது காங்கிரஸ் கட்சி. ஆனால் பா.ஜனதா அரசியல் சாசனம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகளை பறிக்கிறது. பா.ஜனதா ஆட்சியில் 40 சதவீத கமிஷன் கொடுக்காவிட்டால் எந்த பணியும் நடைபெறாது. ஊழல், விலைவாசி உயர்வு, தவறான ஆட்சி நிர்வாகம் தான் பா.ஜனதா அரசின் சாதனை ஆகும்.
பின்தங்கிய நிலையில் உள்ள கலபுரகி, யாதகிரி மாவட்டங்களை பா.ஜனதா அரசு மாற்றாந்தான் மனப்பான்மையுடன் பார்க்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கலவரம் ஏற்படும் என்று அமித்ஷா சொல்கிறார். நாட்டில் 60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தது. எங்கு கலவரம் நடைபெற்றது என்பதை அவர் கூற வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.