எடியூரப்பாவும், டி.கே.சிவக்குமாரும் ரத்தத்தில் எழுதி கொடுக்க வேண்டாம்; குமாரசாமி சாடல்
|எடியூரப்பாவும், டி.கே.சிவக்குமாரும் ரத்தத்தில் எழுதி கொடுக்க வேண்டாம் என்று குமாரசாமி சாடியுள்ளார்.
பெங்களூரு:
எடியூரப்பாவும், டி.கே.சிவக்குமாரும் ரத்தத்தில் எழுதி கொடுக்க வேண்டாம் என்று குமாரசாமி சாடியுள்ளார்.
உரிய மரியாதை
பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமாரசாமி முன்னிலையில் முன்னாள் மந்திரி ஆல்கோட் ஹனுமந்தப்பா ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முன்னாள் மந்திரி ஆல்கோட் ஹனுமந்தப்பா மீண்டும் தனது சொந்த வீட்டிற்கு வந்துள்ளார். காங்கிரசில் அவரது சக்தியை பயன்படுத்தி கொள்ளவில்லை. நேற்று வரை அவரது உடல் காங்கிரசிலும், மனது ஜனதா தளம் (எஸ்) கட்சியிலும் இருந்தது. அவர் என்னுடன் தொடர்பில் தான் இருந்தார். காங்கிரஸ் அவருக்கு உரிய மரியாதை வழங்காததால், அவர் மீண்டும் இங்கு வந்துள்ளார். அவருக்கு மாநில அளவில் கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரத்தம் குறைந்துவிடும்
அவரை போல் இன்னும் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் எங்கள் கட்சிக்கு வரவுள்ளனர். துமகூருவில் 11 தொகுதிகளிலும் எங்கள் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
தேசிய கட்சிகளுக்கு பண பலம் உள்ளது. எங்களுக்கு பண பலம் இல்லை. எங்கள் கட்சியின் வேட்பாளரை இழுக்க மந்திரி சோமண்ணா முயற்சி செய்துள்ளார். இதை நான் கண்டிக்கிறேன். நாங்கள் யாருக்கும் பணம் கொடுத்து கருத்து கணிப்பு நடத்தவில்லை. 150 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று ரத்தத்தில் எழுதி கொடுப்பதாக டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். பாவம் அவர் ரத்தத்தில் எழுதி கொடுக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அவரது உடலில் ரத்தம் குறைந்துவிடும்.
பஞ்சரத்னா யாத்திரை
அதே போல் ஜெகதீஷ் ஷெட்டரை தோற்கடிப்பதாக ரத்தத்தில் எழுதி கொடுப்பதாக எடியூரப்பா சொல்கிறார். யாரும் ரத்தத்தில் எழுதி கொடுக்க வேண்டாம். 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் சொல்கின்றன. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் என்பதை கூற வேண்டும்.
நான் பஞ்சரத்னா யாத்திரை மூலம் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தேன். மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். அதனால் மக்களின் ஆதரவு எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.