தேர்தல் பத்திர விவரங்களை இணையத்தில் வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்
|தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியை பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் நிதி அளித்த நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந்தேதி ரத்து செய்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி மற்றும் நிதியை கொடுத்தவர்களின் விவரங்களை வெளியிடவும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதோடு எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை மார்ச் 15-ந்தேதி மாலை 5 மணிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இந்திய தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி வழங்கியது. அதில், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2024 பிப்ரவரி 15-ந்தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 22,030 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்த நிறுவனங்களின் பெயர்கள், நிதியை பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் பெறப்பட்ட தொகை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்படி பா.ஜ.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பி.ஆர்.எஸ்., சிவசேனா, தெலுங்கு தேசம் கட்சி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தி.மு.க., ஜே.டி.எஸ்., தேசியவாத காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், ஜே.டி.யு., ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்த நிறுவனங்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய வணிக நிறுவனங்களான அதானி மற்றும் ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.