< Back
தேசிய செய்திகள்
தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளம் ஆக சச்சின் டெண்டுல்கர் நியமனம்
தேசிய செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளம் ஆக சச்சின் டெண்டுல்கர் நியமனம்

தினத்தந்தி
|
22 Aug 2023 9:36 AM GMT

5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளம் ஆக சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மேகாலயா ஆகிய 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு, பிரசார பணிகள் உள்ளிட்ட விவகாரங்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டன.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளம் ஆக சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் பிரசாரங்களை மேற்கொள்ள ஏதுவாக சச்சின் நியமிக்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள ரங் பவன் ஆடிட்டோரியத்தில் அவரை தேசிய அடையாளம் ஆக அங்கீகரிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட உள்ளது.

பாரத ரத்னா விருது பெற்றவரான சச்சின், 6 உலக கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளார். 2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களில் அவரும் ஒருவர்.

200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்களை குவித்து, 53.78 பேட்டிங் சராசரி வைத்துள்ளார். இவற்றில் 51 சதம், 68 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சம் 248 ரன்களை குவித்திருக்கிறார்.

இதேபோன்று, 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 18,426 ரன்களை குவித்திருக்கிறார். 44.83 பேட்டிங் சராசரி வைத்துள்ளார். அதிகபட்சம் 200 ரன்களை குவித்துள்ள அவர் 49 சதங்கள் மற்றும் 96 அரை சதங்களை எடுத்திருக்கிறார்.

ஒரெயோரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடி 10 ரன்கள் எடுத்திருக்கிறார். அவர் மொத்தம் 664 போட்டிகளில் 34,357 ரன்களை குவித்து, 48.52 பேட்டிங் சராசரி வைத்திருக்கிறார்.

மொத்தம் 100 சதங்கள் மற்றும் 164 அரை சதங்களும் குவித்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ரன் குவிப்பில் முன்னணி வீரராக உள்ள அவர், சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்