சாம்ராஜ்பேட்டையில் ஜமீர்அகமதுகான் மீண்டும் செல்வாக்கை நிரூபிப்பாரா?
|சாம்ராஜ்பேட்டையில் ஜமீர்அகமதுகான் மீண்டும் செல்வாக்கை நிரூபிப்பாரா என்பது பற்றி இங்கு காண்போம்.
பெங்களூரு:
பெங்களூருவில் உள்ள மைசூரு ரோட்டின் இருபுறத்திலும் சாம்ராஜ்பேட்டை தொகுதி அமைந்துள்ளது. அடிப்படை வசதிகள் நிறைந்த பகுதி, அடிப்படை வசதிகள் எதிர்பார்க்கிற பகுதி என இரு பகுதிகளையும் உள்ளடக்கிய தொகுதியாக சாம்ராஜ்பேட்டை உள்ளது. இந்த தொகுதியில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 437 ஆண்களும், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 505 பெண்களும், 3-ம் பாலினத்தினர் 38 பேரும் உள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 980 வாக்காளர்கள் உள்ளனர். இதில் சுமார் 70 ஆயிரம் பேர் முஸ்லிம்கள். அடுத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இங்கு வசிக்கிறார்கள். பிற சமுதாயத்தினர் தலா சுமார் 6 ஆயிரம் பேர் முதல் 20 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இந்த தொகுதியில் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிப்பவர்கள் முஸ்லிம்களின் வாக்குகள் என்றால் மிகையல்ல.
இந்த தொகுதியில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் உள்ளது. இந்த தொகுதி இடைத்தேர்தல் உள்பட மொத்தம் 15 தேர்தலை சந்தித்துள்ளது. இதில் 7 தடவை காங்கிரசும், 3 தடவை ஜனதா கட்சியும், 3 தடவை ஜனதா கட்சியில் இருந்து பிரிந்து வந்த ஜனதாதளம் (எஸ்) கட்சியும், பா.ஜனதா ஒரு தடவையும், சுயேச்சை ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த தொகுதி ஒரு இடைத்தேர்தலை சந்தித்துள்ளது. அதாவது, கடந்த 2004-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பின்னர் அவர் மராட்டிய கவர்னராக நியமிக்கப்பட்டார். இதனால் தனது எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனால் இடைத்தேர்தலை இந்த தொகுதி சந்தித்தது. இதில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் ஜமீர்அகமதுகான் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். அதில் இருந்து இதுவரை தொடர்ந்து 4 தடவை இதே தொகுதியில் போட்டியிட்டு ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
3 முறை ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆன ஜமீர்அகமதுகான், கடந்த 2018-ம் ஆண்டு கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அங்கிருந்து இருந்து விலகி ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அக்கட்சி சார்பில் 2018-ம் ஆண்டு சாம்ராஜ்பேட்டை தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்றுள்ள ஜமீர்அகமதுகான், இந்த முறையும் காங்கிரஸ் சார்பில் சாம்ராஜ்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் மீண்டும் அங்கு வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிரூபிக்க வரிந்து கட்டி நிற்கிறார்.
அவருக்கு போட்டியாக பா.ஜனதா சார்பில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், முன்னாள் பெங்களூரு போலீஸ் கமிஷனருமான பாஸ்கர்ராவ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முதலில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த பாஸ்கர்ராவ், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார். அவருக்கு சாம்ராஜ்பேட்டையில் பா.ஜனதா கட்சி வாய்ப்பு வழங்கி உள்ளது. அவருக்கும் சாம்ராஜ்பேட்டை தொகுதியில் மக்கள் செல்வாக்கு உள்ளது.
ஜமீர்அகமதுகான் விலகிய பிறகு சாம்ராஜ்பேட்டை தொகுதியில் பலமான வேட்பாளர் இல்லாமல் ஜனதாதளம்(எஸ்) கட்சி திணறி வருகிறது. இந்த முறையாவது பலமான வேட்பாளரை நிறுத்த அக்கட்சி தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
இந்த தொகுதியில் மற்ற வேட்பாளர்களை வீழ்த்தி மீண்டும் ஜமீர் அகமதுகான் வெற்றிக் கொடி நாட்டுவாரா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.