< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல்: கர்நாடகத்தில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு

தினத்தந்தி
|
17 Oct 2022 9:59 PM GMT

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலையொட்டி கர்நாடகத்தில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடைபெற்றது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோா் வாக்களித்தனர்.

பெங்களூரு:

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலையொட்டி கர்நாடகத்தில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடைபெற்றது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோா் வாக்களித்தனர்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மூத்த தலைவர்களான கர்நாடகத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, கேரளாவை சேர்ந்த சசிதரூர் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். அந்தந்த மாநில தலைநகரங்களில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

ராகுல் காந்தி தற்போது ஒற்றுமை பாதயாத்திரை மேற்கொண்டு இருப்பதால் அவர் நேற்று முன்தினம் பாதயாத்திரையை நிறைவு செய்து கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் சங்கனகல்லு கிராமத்தில் தங்கினார்.

அதே கிராமத்தில் ராகுல் காந்தி வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அது ராகுல் காந்தி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவதற்காக உடன் வரும் கன்டெய்னரில் அமைத்த கேரவன் ஆகும். அது வாக்குச்சாவடியாக மாற்றப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் எண் 17 ஆகும்.

மல்லிகார்ஜுன கார்கே- ராகுல்காந்தி

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே வாக்களித்தார். ராகுல் காந்தி பல்லாாி சங்கனகல்லுவில் கன்டெய்னர் கேரவனில் அமைத்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவர் வரிசையில் நின்று தனது ஓட்டை பதிவு செய்தார். மேலும் அவருடன் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள நிர்வாகிகளும் அங்கு வாக்களித்தனர்.

பெங்களூரு வாக்குச்சாவடியில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் வாக்களித்தனர். செயல் தலைவர்கள், மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வரிசையில் வந்து வாக்களித்தனர்.

இந்த தேர்தலையொட்டி வாக்குச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் இன்றி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. வாக்களித்தவர்களுக்கு இடது கை விரலில் கருப்பு மை வைக்கப்பட்டது.

வாக்குப்பெட்டிக்கு சீல்

மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தேர்தல் முடிவடைந்ததும், வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, அதை விமானத்தில் டெல்லிக்கு கொண்டு சென்றனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (புதன்கிழமை) எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்