சாகசம் செய்தபடி ஓட்டிய ஸ்கூட்டர் மோதி முதியவர் பலி
|மைசூரு அருகே சாகசம் செய்தபடி ஓட்டிய ஸ்கூட்டர் மோதி முதியவர் பலியானார். இதுதொடர்பாக விபத்தை ஏற்படுத்திய போக்குவரத்து போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மைசூரு
ஸ்கூட்டர் மோதி முதியவர் பலி
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு அருகே இம்மாவு கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் சாகசம் செய்தபடி சென்றார்.
அப்போது அந்த சாலையில் நடந்து வந்த மைசூரு உதயகிரியை சேர்ந்த குருசாமி (வயது 65) என்பவர் மீது அந்த ஸ்கூட்டர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குருசாமி தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.
மேலும் சாகசம் செய்தபடி ஸ்கூட்டர் ஓட்டிய வாலிபரும் காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து 2 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு நஞ்சன்கூடுவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு குருசாமி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். மேலும் வாலிபர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
போலீசில் புகார்
இதற்கிடையே நஞ்சன்கூடு புறநகர் போலீசார் விரைந்து வந்து, பலியான குருசாமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நஞ்சன்கூடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக பலியான குருசாமியின் மகன் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் வாகன பதிவெண் இல்லாத ஸ்கூட்டரில் சாகசம் செய்த வாலிபரால் தனது தந்தை குருசாமி இறந்துவிட்டதாகவும், எனவே சாகசம் செய்தபடி ஸ்கூட்டர் ஓட்டிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சாகசம் செய்தபடி ஸ்கூட்டரை ஓட்டி முதியவர் மீது மோதி அவரது சாவுக்கு காரணமான வாலிபர் நஞ்சன் கூடுவை சேர்ந்த சையத் (24) என்பதும், இவர், நஞ்சன்கூடு போக்குவரத்து போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் யாஸ்மின் தாஜின் மகன் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த சையத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெண் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் சாகசம் செய்தபடி ஓட்டிய ஸ்கூட்டர் மோதி முதியவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.