விவசாயிகள் போராட்டத்தில் அதிர்ச்சி; மாரடைப்பால் ஒருவர் உயிரிழப்பு
|போராட்ட களத்தில் இருந்த விவசாயிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து சக விவசாயிகள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
புதுடெல்லி,
விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டுள்ளனர். விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்ய தடுப்புகள் வைத்து போலீசார் மறித்துள்ளனர்.
இவர்கள் போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே அரியானா மாநிலம், அம்பாலா மாவட்டம் சம்பு எல்லையில் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுப்புகளை மீற முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் தொடர்ந்து முன்னேற முடியாமல் கடந்த 3 நாட்களாக சம்பு எல்லையிலேயே விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், போராட்டக் களத்தில் இருந்த கியான் சிங் (63) என்ற முதியவருக்கு இன்று காலை நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பஞ்சாபின் ராஜ்புராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாட்டியாலாவில் உள்ள ராஜீந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கியான் சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி உயிரிழந்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.