அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் எதிரொலி - மேலும் 8 ரெயில்கள் ரத்து!
|பீகாரில் இருந்து புறப்படும் இரண்டு ரெயில்கள் உட்பட மேலும் எட்டு ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொல்கத்தா,
ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தெலுங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் பீகாரில் ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நேற்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது. பல இடங்களில் வன்முறை வெடித்த்து. பீகார் மாநிலத்தில் நேற்று முன்தினம் 2 ரெயில்களை தீயிட்டு கொளுத்தினர்.குறைந்தது 12 ரயில்கள் தீவைக்கப்பட்டுள்ளன.ரெயில்வே வளாகத்தில் நடந்த நாசவேலை சம்பவங்களால் ரூ.200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது, 50 பெட்டிகள் மற்றும் 5 என்ஜின்கள் முற்றிலும் எரிந்து, செயலிழந்தன.
புதிய ஆட்சேர்ப்பு கொள்கைக்கு எதிராக போராட்டங்கள் தொடர்வதால், அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகார் முழுவதும் இன்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த நிலையில், கிழக்கு மத்திய ரெயில்வே அதிகார வரம்பில், மேற்கு வங்காளத்தின் வெவ்வேறு நகரங்களில் இருந்து இயக்கப்படும் ஆறு ரெயில்கள் மற்றும் பீகாரில் இருந்து புறப்படும் இரண்டு ரெயில்கள் உட்பட மேலும் எட்டு ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை கிழக்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.