எகிப்து பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்தது: பிரதமர் மோடி டுவீட்
|எகிப்து பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
கெய்ரோ,
பிரதமர் மோடியின் 4 நாட்கள் அமெரிக்க பயணம் நிறைவடைந்ததும், அவர் எகிப்து நாட்டுக்கு நேற்று புறப்பட்டு சென்றார். எகிப்து அதிபர் அப்துல் பஹத் எல் சிசியின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி எகிப்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
எகிப்து நாட்டுக்கான பிரதமர் மோடியின் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும். நேற்று மதியம் எகிப்து சென்றடைந்த அவரை, விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் உற்சாகத்துடன் வரவேற்றார். ராணுவ அணிவகுப்பு உள்பட சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது.
இதன்பின்பு, பிரதமர் மோடிக்கு எகிப்து அதிபர் சிசி, ஆர்டர் ஆப் தி நைல் என்ற விருது வழங்கி இன்று கவுரவித்து உள்ளார். இது எகிப்து நாட்டின் மிக உயரிய விருது ஆகும்.
இந்த நிலையில், எகிப்து பயணம் குறித்து பிரதமர் மோடி, தன்னுடைய டுவீட்டரில் கூறியதாவது; "எகிப்து பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்தது. இந்த பயணம் மூலம் இந்திய- எகிப்து உறவு மேலும் பலப்படுத்தப்படும். எகிப்து அதிபர் மற்றும் அந்நாட்டு மக்களின் அன்பிற்கு நன்றி". இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.