முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வர் கார் மீது முட்டை, கல்வீச்சு; ஜனதாதளம் (எஸ்) தொண்டர்கள் கைது
|அரசு நிகழ்ச்சிக்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியை அழைக்காததை கண்டித்து முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வர் மீது முட்டை, கல்வீசி தாக்குதல் நடத்திய ஜனதாதளம் (எஸ்) தொண்டர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ராமநகர்:
பனிப்போர்
ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா தொகுதி எம்.எல்.ஏ.வாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பணியாற்றி வருகிறார். இந்த தொகுதியில் குமாரசாமிக்கும், பா.ஜனதா எம்.எல்.சி. சி.பி.யோகேஷ்வருக்கும் இடையே யார் பெரிய நபர் என்று பனிப்போர் நிலவி வருகிறது. இந்த பனிப்போர் காரணமாக குமாரசாமி, சி.பி.யோகேஷ்வர் ஆதரவாளர்கள் அடிக்கடி மோதி கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று சன்னப்பட்டணா டவுனில் உள்ள பைரப்பட்டணா பகுதியில் ரூ.50 கோடி செலவில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை கர்நாடக உயர்கல்வித்துறை மந்திரியும், ராமநகர் மாவட்ட பொறுப்பு மந்திரியுமான அஸ்வத்நாராயண் தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி குமாரசாமிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
போலீஸ் தடியடி
இதுபற்றி அறிந்ததும் நேற்று காலை பைரப்பட்டணா பகுதியில் குவிந்த ஜனதாதளம் (எஸ்) தொண்டர்கள், அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குமாரசாமிக்கு அழைப்பு விடுக்கப்படாததை கண்டித்து போராட்டம் நடத்தினர். அப்போது மந்திரி அஸ்வத் நாராயண், சி.பி.யோகேஷ்வர் எம்.எல்.சி.க்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும் மந்திரி அஸ்வத் நாராயணின் உருவப்படத்தை தரையில் போட்டு காலால் மிதித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனால் ஜனதாதளம் (எஸ்), பா.ஜனதா தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதம் உண்டானது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறும் நிலை உருவானது. இதுபற்றி அறிந்ததும் போலீசார் இருகட்சி தொண்டர்களையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் ஜனதாதளம் (எஸ்) தொண்டர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் ஜனதாதளம் (எஸ்) தொண்டர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
கார் மீது கல்வீச்சு
இதற்கிடையே அரசு நிகழ்ச்சிக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து குமாரசாமி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை தொடர்பு கொண்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று மந்திரி அஸ்வத் நாராயணுக்கு, பசவராஜ் பொம்மை உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். ஆனாலும் பைரபட்டணா கிராமத்தில் வளர்ச்சி பணிகளை சி.பி.யோகேஷ்வர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது சி.பி.யோகேஷ்வரை, போலீசார் பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த சந்தர்ப்பத்தில் சி.பி.யோகேஸ்வரின் காரை முற்றுகையிட்டு ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் காரின் மீது முட்டை, கல்லை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காரின் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து கார் மீது முட்டை, கல் வீசிய நூற்றுக்கும் மேற்பட்ட ஜனதாதளம் (எஸ்) தொண்டர்களை சன்னப்பட்டணா போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி சென்றனர். சி.பி.யோகேஸ்வர் எம்.எல்.சி. கார் மீது கல் வீசி தாக்கப்பட்ட சம்பவம் ராமநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.