பாஜகவின் மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்; கர்நாடக காங்கிரஸ்
|முட்டை வீச்சு, கருப்பு கொடி போன்ற பா.ஜனதாவின் மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சித்ரதுர்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சித்தராமையா வெறும் காங்கிரஸ் தலைவர் மட்டுமல்ல. அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். அவரது கருத்துகள் சரியில்லை என்றால் அதை கண்டிக்கலாம். வேறு கருத்துகளை கூறி விமர்சிக்கலாம். ஆனால் முட்டை வீசுவது போன்ற மோசமான சம்பவங்களில் ஈடுபடுவது சரியல்ல. அரசின் கண்களை திறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குடகு மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட சித்தராமையா சென்றுள்ளார்.
மக்கள் பிரச்சினைகளை சந்திக்கும்போது, அரசை தட்டி எழுப்பும் வேலை எதிர்க்கட்சிக்கு உள்ளது. அந்த கடமையை செய்தால் பா.ஜனதாவினர் முட்டை வீசுவது, கருப்பு கொடியை காட்டுவது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு செய்து காங்கிரசையோ அல்லது சித்தராமையாவையோ மிரட்ட முடியாது. முட்டை வீச்சு, கருப்பு கொடி காட்டுவது போன்ற மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம்.
போராட்டம் நடத்துமாறு நான் கூறவில்லை. ஆனால் காங்கிரசார் தாமாக முன்வந்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்துகிறார்கள். ஒருவேளை நான் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் சட்டம்-ஒழுங்கு என்ன ஆகும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சற்று யோசித்து பார்க்க வேண்டும். பா.ஜனதாவினரை இந்த அரசு தடுக்காவிட்டால் காங்கிரசும் போராட்டம் நடத்தும்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை கர்நாடகத்தில் 510 கிலோ மீட்டர் நடைபெறும். குண்டல்பேட்டையில் தொடங்கி மைசூரு, ஸ்ரீரங்கபட்டணா, மேல்கோட்டை, நாகமங்கலா, துருவகெரே, இரியூர், சல்லகெரே, பல்லாரி, ராய்ச்சூருக்கு செல்கிறார். அவர் அந்த வழியாக தெலுங்கான மாநிலத்திற்கு செல்கிறார். கர்நாடகத்தில் மொத்தம் 21 நாட்கள் இந்த யாத்திரை நடைபெற உள்ளது.
குண்டல்பேட்டையில் வனப்பகுதி உள்ளதால் அங்கு யாத்திரை நடத்த வேண்டாம் என்று கேரளா போலீசார் கூறியுள்ளனர். அதே போல் கர்நாடகத்தில் பிரச்சினைக்குரிய இடங்கள் உள்ளதா? என்பது குறித்தும் நாங்கள் ஆலோசிக்க முடிவு எடுக்க இருக்கிறோம். டெல்லியில் இருந்து ஒரு குழு வந்து அவர் பயணிக்கும் பாதையை ஆய்வு செய்ய உள்ளது.
சித்தராமையா மீது முட்டை வீசியவர்கள் காங்கிரசார் என்று பா.ஜனதாவை சேர்ந்த போப்பையா எம்.எல்.ஏ. கூறியுள்ளார். முதலில் அவரை கைது செய்ய வேண்டும். பா.ஜனதாவின் மறுபெயர் பொய். தாங்கள் செய்த விஷயத்திற்காக மற்றவர்கள் மீது பழிபோடுவது கோழைத்தனம்.இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.