ரெயில்வே பணி நியமன ஊழல்: தேஜஸ்வி யாதவிடம் 9 மணி நேரம் அமலாக்க துறை விசாரணை
|ரெயில்வே பணி நியமன ஊழல் தொடர்பாக தேஜஸ்வி யாதவிடம் 9 மணி நேரம் அமலாக்க துறை விசாரணை நடத்தினார்.
புதுடெல்லி,
ராஷ்டிரீய ஜனதா தள கட்சித்தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004-2009 காலகட்டத்தில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரெயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது, ரெயில்வேயில் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதாகவும், அவர்களிடம் இருந்து அதற்கான பிரதிபலனாக லாலு பிரசாத் குடும்பத்தினர் மிக மலிவான விலையில் நிலங்களை பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக லாலு பிரசாத் யாதவின் மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் நேற்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
முன்னதாக கடந்த மாத இறுதியில் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது சகோதரி மிசா பாரதி ஆகிய இருவரும் அமலாக்க துறை அதிகாரிகளின் விசாரணைக்கு நேரில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.