சஞ்சய் ராவத் மனைவியிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை
|குடிசை சீரமைப்பு திட்ட முறைகேடு வழக்கில் சஞ்சய் ராவத் எம்.பி.யின் மனைவியிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. வெளியே வந்த அவர் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்ததாக கூறினார்.
மும்பை,
சஞ்சய் ராவத் கைது
மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரவின் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தியது. விசாரணையில் அவர் மோசடியில் கிடைத்த பணத்தின் ஒருபகுதியை சஞ்சய் ராவத், குடும்பத்தினருக்கு கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து பத்ரா சால் மோசடி வழக்கில் சஞ்சய் ராவத்தை கடந்த 1-ந் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். தற்போது அவர் அமலாக்கத்துறை காவலில் உள்ளார்.
மனைவிக்கு சம்மன்
பிரவின் ராவத்திடம் இருந்து சஞ்சய் ராவத் குடும்பத்தினர் நேரடியாக ரூ.1.06 கோடி பணப்பலன் பெற்றதாக கோர்ட்டில் அமலாக்கத்துறை முதலில் கூறியது.
கடந்த வியாழக்கிழமை அமலாக்கத்துறை கோர்ட்டில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் சஞ்சய் ராவத் மோசடி மூலம் கிடைத்த பணத்தில் அலிபாக்கில் ரூ.1.17 கோடிக்கு நிலம் வாங்கி இருப்பதாகவும், சஞ்சய் ராவத் மனைவியின் வங்கி கணக்கிற்கு ரூ.1.08 கோடி அனுப்பப்பட்டு இருப்பதும் தெரியவந்து இருப்பதாக கூறியது.
மேலும் இந்த பணம் தொடர்பாக விசாரணை நடத்த சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்திற்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
9 மணி நேரம் விசாரணை
இதையடுத்து வர்ஷா ராவத் நேற்று காலை 11 மணியளவில் மும்பை பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பணபரிவர்த்தனை குறித்து இரவு 8 மணி வரை விசாரணை நடத்தினர். 9 மணி நேர விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
வெளியே வந்த வர்ஷா ராவத் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமலாக்கத்துறையினர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தேன். தற்போதைக்கு மீண்டும் விசாரணைக்கு அழைக்கவில்லை. நான் சிவசேனாவை விட்டு விலக மாட்டேன். என்ன நடந்தாலும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கு எனது ஆதரவு தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.