< Back
தேசிய செய்திகள்
சத்தீஷ்கார் முதல்-மந்திரியின் ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
தேசிய செய்திகள்

சத்தீஷ்கார் முதல்-மந்திரியின் ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

தினத்தந்தி
|
24 Aug 2023 3:31 AM IST

சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரியின் அரசியல் ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.

அந்த மாநிலத்தில், சுரங்க ஊழல், மதுபான ஊழல், மாவட்ட கனிம அறக்கட்டளை நிதிய முறைகேடு, ஆன்லைன் சூதாட்ட முறைகேடுகள் ஆகிய ஊழல்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த 2 நாட்களாக சத்தீஷ்கார் மாநிலத்தில் ராய்ப்பூர், துர்க் ஆகிய நகரங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வந்தது.

இந்நிலையில், நேற்று முதல்-மந்திரி பூபேஷ் பாகலின் அரசியல் ஆலோசகர் வினோத் வர்மா, பூபேஷ் பாகலின் சிறப்பு அதிகாரி ஆகியோரது ராய்ப்பூர் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது.

ஆன்லைன் சூதாட்ட முறைகேடு

துர்க் நகரில் ஒரு தொழிலதிபரின் வீட்டிலும் சோதனை நடந்தது. வினோத் வர்மா வீட்டில் நடந்த சோதனையின்போது, பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.

எந்த வழக்குக்காக இச்சோதனை நடத்தப்பட்டது என்று தெரியவில்லை.

இருப்பினும், ஆன்லைன் சூதாட்ட முறைகேடுகள் தொடர்பாக சோதனை நடப்பதாக கருதப்படுகிறது.

முதல்-மந்திரி கிண்டல்

இதற்கிடையே, அமலாக்கத்துறை சோதனை குறித்து முதல்-மந்திரி பூபேஷ் பாகல் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா அவர்களே. எனது பிறந்தநாளில், என் அரசியல் ஆலோசகர் மற்றும் சிறப்பு அதிகாரி வீடுகளுக்கு அமலாக்கத்துறையை அனுப்பி எனக்கு விலைமதிப்பில்லாத பரிசு அளித்து இருக்கிறீர்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பணியாது

மேலும், காங்கிரஸ் மேலிடம் சார்பில் அக்கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சத்தீஷ்கார் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடையும் என்ற கருத்து கணிப்புகளின் விளைவாக இச்சோதனை நடந்துள்ளது. இந்த அச்சுறுத்தல்களுக்கு காங்கிரஸ் அரசு அடிபணியாது. எங்களுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்