ஜார்கண்ட் முதல்-மந்திரி உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
|அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் சட்ட விரோதமாக சுரங்கம் நடத்தி பல ஆயிரம் கோடி வரி ஏய்ப்பும், முறைகேடுகளும் செய்து இருப்பதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து நடந்த விசாரணையில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் சுரங்க முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்தது.
அதன் அடிப்படையில் ஹேமந்த்சோரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. என்றாலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் அடுத்தடுத்து 7 தடவை சம்மன் அனுப்பினார்கள்.
இதனால் கோபம் அடைந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை மூலம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். தன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தால் அது ஜார்க்கண்ட் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்றும் கூறினார்.
இந்தநிலையில், அமலாக்கத துறை அதிகாரிகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தலைநகர் ராஞ்சியில் 10 இடங்களில் சோதனை நடந்தது. ராஜஸ்தான் மாநிலத்திலும் சோதனை நடந்து வருகிறது. இன்று சோதனை நடந்து வரும் இடங்கள் அனைத்தும் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு தொடர்புடைய இடங்கள் ஆகும். எனவே ஹேமந்த் சோரனை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் இன்றைய சோதனையை அமலாக்கத்துறை மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஹேமந்த் சோரன் மீது பிடியை இறுகச்செய்து இருக்கும் அமலாக்கத்துறை அடுத்தகட்ட விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளது. ராஞ்சியில் இன்று ஹேமந்த் சோரன் உதவியாளர் வீட்டில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஹேமந்த் சோரனின் பத்திரிகை ஆலோசகர் அபிஷேக் பிரசாந்தும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார். டிஎஸ்பி ராஜேந்திர துபே என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் முற்றுகையிட்டு சோதனை நடத்தி வருகிறார்கள். கலெக்டர் ராம்நிவாஸ் வீட்டிலும் சோதனை நடக்கிறது.
ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தானில் உள்ள சாஹிப் கஞ்ச் மாவட்ட கலெக்டர் வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.