பழங்குடியினர் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு.. கர்நாடக காங். எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
|ஊழல் புகார் தொடர்பாக கர்நாடக மாநில காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் மகரிஷி வால்மீகி பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தின் அக்கவுண்ட் சூப்பிரெண்டு கடந்த மே மாதம் தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த தற்கொலைக் குறிப்பில், வால்மீகி கழகத்தில் இருந்து பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு சட்டவிரோதமாக பணம் மாற்றப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.
கழகத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.187 கோடி பணம், அனுமதியின்றி பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், ஐதராபாத்தில் உள்ள சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கியின் பல்வேறு கணக்குகளில் ரூ.88.62 கோடி சட்டவிரோதமாக டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஊழல் குற்றச்சாட்டு பூதாகரமாக வெடித்த நிலையில், இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், பழங்குடியினர் நலத்துறை மந்திரியுமான நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
வால்மீகி கழக முறைகேடு புகார் தொடர்பாக கர்நாடக மாநில காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. யூனியன் பாங்க் ஆப் இந்தியா கொடுத்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ. அமைப்பும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
இதுதவிர சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் மந்திரி நாகேந்திரா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் வால்மீகி கழக தலைவருமான தத்தால் ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட 20 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்திவருகின்றனர். கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒரு மாநிலம் என 4 மாநிலங்களில் சோதனை நடத்தப்படுகிறது.