சத்தீஷ்கார்: காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை - காங்கிரஸ் மாநாடு நெருங்கும் நேரத்தில் அதிரடி
|சத்தீஷ்காரில் நிலக்கரி கொண்டுவர மாமூல் வசூலித்ததாக கூறப்படும் வழக்கில், அங்குள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
புதுடெல்லி,
சத்தீஷ்கார் மாநிலத்தில் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. அங்கு நிலக்கரியை கொண்டுவரவும், வேறு மாநிலங்களுக்கு எடுத்துச்செல்லவும் மாமூல் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு டன் நிலக்கரிக்கு குறிப்பிட்ட தொகை வீதம் மாமூல் பெறப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள் ஆகியோர் அடங்கிய குழு, இந்த வசூலிப்பில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதில் நடந்த பெருமளவிலான ஊழல் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
9 பேர் கைது
மாநில ஆட்சிப்பணி அதிகாரி சவுராசியா, சூரியகாந்த் திவாரி, அவருடைய உறவினர் லட்சுமிகாந்த் திவாரி, சத்தீஷ்கார் ஐ.ஏ.எஸ். அதிகாரி சமீர் பிஷ்னோய், நிலக்கரி தொழில் அதிபர் சுனில் அகர்வால் ஆகியோர் உள்பட 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் ஆதாயம் அடைந்தவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது.
அந்தவகையில், நேற்று சத்தீஷ்கார் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. காங்கிரஸ் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
மாநாடு
சத்தீஷ்கார் மாநில தலைநகர் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை இம்மாநாடு நடக்கிறது.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுப்பது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு 3 நாட்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூன்றாந்தர அரசியல்
இதற்கிடையே, இச்சோதனைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்போதைய மத்திய அரசால், விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. பிரதமர் மோடியின் மூன்றாந்தர அரசியலுக்கு இது சிறந்த உதாரணம். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்தி, பழிவாங்கும் அரசியல் நடத்தி வருகிறார்.
இருப்பினும், இத்தகைய தந்திரங்களுக்கு அஞ்ச மாட்டோம். இது அமிர்த காலம் இல்லை. அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை காலம்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறைக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு எதிராக 17 எதிர்க்கட்சிகள் ஏற்கனவே ஒன்று சேர்ந்துள்ளன. இதுதொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்வோம் என்று அவர் கூறினார்.