< Back
தேசிய செய்திகள்
வக்பு வாரிய முறைகேடு: டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான் கைது

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

வக்பு வாரிய முறைகேடு: டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான் கைது

தினத்தந்தி
|
19 April 2024 2:05 AM IST

சோதனையின் போது டிஜிட்டல் ஆதாரங்கள் உள்பட பல முக்கிய சான்றுகள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இஸ்லாமிய மத மக்கள் அவர்களின் சொத்துக்களை வக்பு பத்திரம் மூலம் இஸ்லாமிய மத வழிபாட்டு தலங்களுக்கு தானமாக கொடுக்கும் வழக்கம் உண்டு. அவ்வாறு கொடுக்கப்படும் சொத்துக்கள், நிலங்களை பராமரிக்க, நிர்வகிக்க பொது மற்றும் தனியார் வக்பு வாரியங்கள் உள்ளன.

இந்த சூழலில் டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான், கடந்த 2016-ம் ஆண்டு டெல்லி வக்பு வாரிய தலைவராக செயல்பட்டார். தலைவராக இருந்த காலத்தில், விதிகளை மீறி வக்பு வாரியத்திற்கு நிர்வாகிகளை நியமித்தது, பணமோசடியில் ஈடுபட்டதாக அமனத்துல்லா கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. அமனத்துல்லா கானை அமலாக்கத்துறை நேற்றிரவு கைது செய்துள்ளது. அமானத்துல்லா கான் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, அவர் டெல்லி வக்பு வாரியத்தில் சட்டவிரோதமாக பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியதன் மூலம் ரொக்கமாக லஞ்சம் பெற்றதாகவும், அசையா சொத்துக்களை அவரது கூட்டாளிகளின் பெயரில் வாங்க முதலீடு செய்ததாகவும் கூறியுள்ளது.

மேலும் அமானத்துல்லா குற்றச் செயல்களில் இருந்து பெரும் வருமானத்தை பணமாகப் பெற்றதாகவும், இந்த ரொக்கத் தொகை டெல்லியில் உள்ள பல்வேறு அசையா சொத்துக்களை அவரது கூட்டாளிகளின் பெயரில் வாங்கியதில் முதலீடு செய்யப்பட்டதாகவும், சோதனையின் போது டிஜிட்டல் ஆதாரங்கள் உள்பட பல முக்கிய சான்றுகள் கைப்பற்றப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்க உள்ளநிலையில் ஆம் ஆத்மி ஏம்.எல்.ஏ. கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்