< Back
தேசிய செய்திகள்
மே.வங்கத்தில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்- சோதனை நடத்த முடியாமல் திரும்பினர்
தேசிய செய்திகள்

மே.வங்கத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்- சோதனை நடத்த முடியாமல் திரும்பினர்

தினத்தந்தி
|
5 Jan 2024 3:35 PM IST

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மேற்கு வங்க பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலத்தில் ரேஷன் திட்டத்தில் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இவ்வழக்கில் மந்திரி ஜோதி பிரியா மாலிக் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளான ஷாஜஹான் ஷேக், சங்கர் ஆத்யா வீடுகளில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவுக்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பாக சென்றனர்.

ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்ற வாகனத்தையும் அந்த கும்பல் தாக்கியது. இதில், அமலாக்கத்துறையினரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதில்,அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலரும் காயம் அடைந்தனர். இதனால், சோதனை நடத்த முடியாமல் அங்கிருந்து அதிகாரிகள் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தாக்குதல் சம்பவத்துக்கு மேற்கு வங்க பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, "தாக்குதல் நடத்தியவர்கள் திரிணமூல் காங்கிரஸின் உள்ளூர் தலைவர்களால் ஆதரிக்கப்படும் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக இருக்கலாம். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தொடர்வது தேசத்துக்கு அச்சுறுத்தல் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்க மாநில பாஜக முன்னாள் தலைவர் ராகுல் சின்கா இந்தத் தாக்குதல் சம்பவத்தை கண்டித்துள்ளார். அவர் கூறுகையில், "ஷாஜகான் ஷேக் சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்த டான். இங்கு அவருக்கு எதிராக பல கொலை வழக்குகள் உள்ளன. அவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் போலீஸார் அவர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்