< Back
தேசிய செய்திகள்
ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

கோப்புப்படம் ANI

தேசிய செய்திகள்

ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

தினத்தந்தி
|
8 July 2024 7:01 PM GMT

ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

ராஞ்சி,

ஜார்கண்ட் முதல்-மந்திரியாக இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் நிலமோசடி வழக்கில் கடந்த ஜனவரி 31-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே அவரது அரசில் மந்திரியாக இருந்த சம்பாய் சோரன், புதிய முதல்-மந்திரியானார்.

சுமார் 5 மாதங்கள் சிறையில் இருந்த ஹேமந்த் சோரனுக்கு ஜூன் 28-ம்தேதி ஜார்கண்ட் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுதலையானார். எனவே அவர் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க கட்சியினரும், கூட்டணி தலைவர்களும் விரும்பினர். இதற்கு வசதியாக முதல்-மந்திரி பதவியில் இருந்து சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து ஜார்கண்டின் 13-வது முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் கடந்த 4-ம் தேதி பதவியேற்றார். அத்துடன் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் நோக்கில் நேற்று சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். பின்னர் இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களும், நியமன உறுப்பினர் ஒருவரும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

81 உறுப்பினர் ஜார்கண்ட் சட்டசபையில் தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கை 76 ஆகும். இதில் 45 உறுப்பினர்கள் ஹேமந்த் சோரன் அரசை ஆதரித்து வாக்களித்தனர். இதன் மூலம் அவரது அரசு வெற்றி பெற்றது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கும் முன் அனைத்து அம்சங்களையும் ஐகோர்ட்டு ஆராயவில்லை. எனவே ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்