ரூ.3.5 கோடி மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரசேகர் மேலும் ஒரு வழக்கில் கைது
|மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை 9 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
மோசடி மன்னன்
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் கைது செய்யப்பட்ட பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் (வயது 33), டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்தபடியே தொழில் அதிபர் ஷிவிந்தர் சிங் என்பவரின் மனைவி அதிதியிடம் ரூ.200 கோடி மோசடி செய்தும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த வழக்கில் சுகேசின் மனைவி லீனா மரியத்துக்கும் தொடர்பு இருந்துள்ளது.
நடிகைகளுக்கு பணம்
இந்த மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் சிறைக்குள்ளேயே சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட நடிகைகளுக்கும் பணம் செலவழித்தார். நடிகைகளை சிறைக்கும் வரவைத்துள்ளார். இந்த மோசடி வழக்கு, டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
சுகேஷ் சந்திரசேகரும், வழக்கில் தொடர்புடைய அவருடைய மனைவி லீனா மரியாவும் தற்போது டெல்லி மண்டோலி சிறையில் உள்ளனர்.
ரூ.3.5 கோடி மோசடி
இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் தற்போது மேலும் ஒரு வழக்கில் சிக்கி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். அதாவது ஷிவிந்தர் சிங்கின் சகோதரர் மல்விந்தர் சிங்கின் மனைவி ஜப்னாவிடமும் அதே மாதிரி ரூ.3.5 கோடி பறித்துள்ளார்.
இது தொடர்பான புகாரின் பேரில் அமலாக்க அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரை சிறையில் இருந்து வெளியே எடுத்து விசாரிக்க 14 நாட்கள் அனுமதி வேண்டும் என டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனு செய்தனர்.
இதை விசாரித்த நீதிபதி சுகேஷ் சந்திரசேகரை 9 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.