பண மோசடி வழக்கு: ரகசிய தகவல்களை கசிய விட்ட 2 அமலாக்கத்துறை ஊழியர்கள் கைது
|பண மோசடி வழக்கு விசாரணையின் ரகசிய தகவல்களை கசிய விட்ட 2 அமலாக்கத்துறை ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,
மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் செயல்பட்டு வரும் சேவா விகாஸ் கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் அமர் முல்சந்தனி, தனது பதவி காலத்தில் வங்கியில் பெரிய அளவில் பணமோசடி செய்து வங்கிக்கு ரூ.429 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவரை அமலக்காத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே விசாரணையின்போது மும்பையில் உள்ள அமலாக்க இயக்குனரக அலுவலகத்துக்கு ஒருவர் அடிக்கடி வந்து செல்வதும், அவர் ஊழியர்களிடம் ரகசியமாக பேசி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை பிடித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்தபோது அவர் அமர் முல்சந்தனியின் உதவியாளர் என்பதும், அமலாக்க இயக்குனரக அலுவலகத்தில் பணியாற்றும் 2 ஒப்பந்த ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து விசாரணை குறித்த ரகசிய தகவல்களை தெரிந்து கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அமர் முல்சந்தனியின் உதவியாளர் மற்றும் 2 ஒப்பந்த ஊழியர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.