< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எதிரொலி; கட்சி அலுவலகம் முன் பஜ்ரங் தள தொண்டர்கள் ஆர்ப்பாட்டம், போலீசாருடன் தள்ளுமுள்ளு
தேசிய செய்திகள்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எதிரொலி; கட்சி அலுவலகம் முன் பஜ்ரங் தள தொண்டர்கள் ஆர்ப்பாட்டம், போலீசாருடன் தள்ளுமுள்ளு

தினத்தந்தி
|
3 May 2023 1:27 PM IST

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தளத்திற்கு தடை என அறிவித்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள அக்கட்சி அலுவலகம் முன் பஜ்ரங் தள தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐதராபாத்,

கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பணியாற்றி வருகின்றன.

கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசாரம், பேரணி, கட்சி பொது கூட்டம் போன்றவற்றிலும் கலந்து கொண்டு வருகின்றன. கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் நட்சத்திர பிரசாரகர்களும் கலந்து கொண்டு மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில், பஜ்ரங் தளம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகியவற்றை தடை செய்வோம் என தெரிவித்து இருந்தது.

அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டு உள்ள அந்த அறிக்கையில், சட்டம் மற்றும் அரசியல் சாசனம் புனிதம் வாய்ந்தது என நாங்கள் நம்புகிறோம். அதனை தனி நபர்கள் அல்லது பஜ்ரங் தளம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் பிற அமைப்புகள், பெரும்பான்மையினர் அல்லது சிறுபான்மையினர் இடையே பகைமையையோ அல்லது வெறுப்புணர்வையோ ஊக்குவித்து மீறுதல் கூடாது.

சாதி மற்றும் மத ரீதியாக சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வை பரப்ப கூடிய தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது காங்கிரஸ் கட்சியானது உறுதியான மற்றும் தீர்க்கம் வாய்ந்த முடிவை எடுக்கும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

அதுபோன்ற எந்தவொரு அமைப்பின் மீதும் சட்டத்தின்படி, தடை விதிப்பது உள்ளிட்ட முடிவுகளை நாங்கள் எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளது.

இதுபற்றி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவரான சுரேந்திரா ஜெயின் கூறும்போது, பஜ்ரங் தள அமைப்பை, தேச விரோத மற்றும் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் காங்கிரஸ் கட்சி ஒப்பிட்டிருப்பது துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது.

நாட்டு மக்கள் இதனை ஏற்கமாட்டார்கள். இந்த சவாலை பஜ்ரங்தளம் ஏற்கிறது. அனைத்து ஜனநாயக வழிகளிலும் இதற்கு நாங்கள் பதிலளிப்போம் என்று கூறினார்.

இந்த நிலையில், தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் இன்று ஒன்று திரண்டனர்.

கட்சி அலுவலகத்திற்கு முன்பு தடுப்பான்களை அமைத்து பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். எனினும், அவர்களை தள்ளி விட்டு, விட்டு உள்ளே நுழைய முயற்சித்தனர்.

இதனால், பஜ்ரங் தள அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொண்டர்களில் சிலர் கொடியை பிடித்தபடி, கோஷங்களையும் எழுப்பினர். இதன்பின் அவர்களை தடுத்து, கைது செய்த போலீசார், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் செய்திகள்