தேர்தல் பணியாளர்கள் தபால் ஓட்டு போட புதிய விதி - தேர்தல் கமிஷன் பரிந்துரை
|முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க தேர்தல் பணியாளர்கள் தபால் ஓட்டு போட புதிய விதியை கொண்டு வர தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி,
சட்டசபை, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணியில் ஈடுபடுகிற அரசு பணியாளர்கள், ராணுவ வீரர்கள், போலீசார் உள்ளிட்டோர் தபால் ஓட்டு போடும் நடைமுறை உள்ளது. தேர்தல் பணிக்காக அவர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறபோது தபால் ஓட்டுக்கான படிவம்-12 பி வழங்கப்படுகிறது. அதை அவர்கள் நிரப்பி வழங்குகிறபோது, பயிற்சி வகுப்பு முடிகிறபோது வாக்குச்சீட்டு வழங்கப்படும்.
அவர்கள் ஓட்டை பதிவு செய்து, தொகுதி தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் சேர்க்கலாம். அல்லது தொகுதி தேர்தல் அலுவலருக்கு தபாலில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியாளர்கள் பலரும் தபாலில் அனுப்புவதற்கே அனுமதி பெறுவதாக கூறப்படுகிறது.
தேர்தல் பணியாளர்கள் பலரும் ஓட்டை உடனே செலுத்தி தபாலில் அனுப்பாமல், ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் நேரத்தில் போய்ச்சேரும்படி தபாலில் அனுப்புகிறார்கள்.
இது முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக தேர்தல் கமிஷன் கருதுகிறது.
எனவே தபால் ஓட்டு தொடர்பான விதிமுறையை மாற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷன் விரும்புகிறது. கடந்த 16-ந் தேதி தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தலைமையில் நடந்த தேர்தல் கமிஷன் கூட்டத்தில் ஒரு முக்கிய பரிந்துரை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
அதாவது, தேர்தல் பணியாளர்கள் தங்கள் வாக்குச்சீட்டை நீண்ட காலம் தங்களிடம் வைத்துக்கொள்வதால் அதைத் தவறாக பயன்படுத்துவதைத் தவிர்த்து, அதற்கான நியமிக்கப்பட்ட மையங்களில் மட்டுமே செலுத்தும் வகையில் விதியை மாற்ற வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.
இந்த விதி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அமல்படுத்தப்பட்டால் இது தேர்தல் பணியில் ஈடுபடுகிற அரசு ஊழியர்கள் நீண்ட காலம் வாக்குச்சீட்டை தங்கள் வசம் வைத்திருந்து, அதனால் ஓட்டுக்கு பணம் வாங்குதல், அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகுதல், வேட்பாளர்களின் செல்வாக்குக்கு பயந்து செயல்படுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும் என கூறப்படுகிறது.
இதற்காக தேர்தல் நடத்தை விதிகள் 18-ல் மாற்றம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.