< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடி இன்னும் எவ்வளவு காலம் மவுனம் சாதிப்பார்? ராகுல்காந்தி கேள்வி
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி இன்னும் எவ்வளவு காலம் மவுனம் சாதிப்பார்? ராகுல்காந்தி கேள்வி

தினத்தந்தி
|
22 Aug 2022 10:13 PM IST

குஜராத்தில் போதைப்பொருட்கள் பிடிபடுவது நீடிக்கும்நிலையில், பிரதமர் மோடி இன்னும் எவ்வளவு காலத்துக்கு மவுனம் சாதிப்பார் என்று ராகுல்காந்தி கேள்வி விடுத்துள்ளார்.

புனித மண்ணில் விஷம்

குஜராத் மாநிலத்தில், அடுத்தடுத்து போதைப்பொருட்கள் பிடிபட்டு வருகின்றன. சமீபத்தில், ரூ.1,026 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது 'டுவிட்டர்' பக்கத்தில் மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்வி விடுத்தார். அவர் கூறியிருப்பதாவது:-

குஜராத்தில், போதைப்பொருள் வர்த்தகம் செய்வது எளிதான காரியமாகி விட்டதா? பிரதமரே இதற்கு பதில் அளியுங்கள். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள், குஜராத்தில் குவிகின்றன. காந்தி-படேல் புனித மண்ணில் இந்த விஷத்தை பரப்பியது யார்?

ஆதரவு கொடுப்பது யார்?

திரும்ப திரும்ப போதைப்பொருள் பிடிபட்ட போதிலும், துறைமுக உரிமையாளரை விசாரிக்காதது ஏன்? குஜராத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவரை ஏன் இன்னும் பிடிக்க முடியவில்லை?

மத்திய அரசிலும், குஜராத் அரசிலும் அமர்ந்து கொண்டு மாபியா நண்பர்களுக்கு ஆதரவு கொடுப்பது யார்? பிரதமர் மோடி இன்னும் எவ்வளவு காலத்துக்கு மவுனம் சாதிப்பார்? அவர் பதில் அளித்தாக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.2½ லட்சம் கோடி போதைப்பொருள்

இதுபோல், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் ஆமதாபாத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குஜராத்தில் உள்ள தனியார் துறைமுகங்களான முந்த்ரா, பிபாவவ் ஆகியவை இந்தியாவில் போதைப்பொருட்களை கொண்டு வரும் நுழைவாயில்களாக உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பிடிபட்டுள்ளன. இது, குஜராத் பட்ஜெட்டை விட பெரிய தொகை.

அமலாக்கத்துறையோ, போதைப்பொருள் தடுப்பு துறையோ, சி.பி.ஐ.யோ அந்த துறைமுகங்களின் உரிமையாளர்களை பிடித்து, ஏன் முழுமையான விசாரணை நடத்தவில்லை?

உள்துறை மந்திரியை நீக்க வேண்டும்

குஜராத் மாநில உள்துறை மந்திரி ஹரிஷ் சங்வி, போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க எதுவும் செய்யவில்லை. அவர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். அவர் விலக மறுத்தால், அவரை நீக்க வேண்டும்.

பிரதமர் மோடியும் மவுனம் சாதித்து வருகிறார். 2 தனியார் துறைமுகங்களிலும் மீண்டும் மீண்டும் போதைப்பொருள் வருவது ஏன் என்று அவர் அந்த துறைமுக உரிமையாளர்களை கேட்கவில்லையா? போதைப்பொருள் வருவதை தடுக்க சிறப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவில்லையா?

இது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதை காங்கிரஸ் தொடர்ந்து எழுப்பும். குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்த சட்டவிரோத வர்த்தகம் குறித்து விசாரணை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்