நவராத்திரி கொண்டாட்டத்திற்கு பின் மண்பானைகள் பறவை கூடுகளாக மாற்றம்
|குஜராத்தில் நவராத்திரி கொண்டாட்டத்திற்கு பின் மண்பானைகளை பயனளிக்கும் வகையில் பறவை கூடுகளாக மாற்றி வருகின்றனர்.
சூரத்,
நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பின்னர், இந்த ஆண்டு நிலைமை மேம்பட்ட நிலையில் பல்வேறு பண்டிகைகளும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன்படி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நவராத்திரி கொண்டாட்டங்கள் நடைபெற்று முடிந்தன.
நவராத்திரி திருவிழாவுக்கு என்று மண்பானைகளும் தயாராகின. அவற்றில் பல வண்ணங்கள் பூசப்பட்டு, அழகாக வடிவமைக்கப்பட்டன. இந்த மண்பானைகள் திருவிழா கொண்டாட்டத்திற்கு பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்படும். அல்லது கோவில்களில் வைக்கப்படும்.
ஆனால், இந்த முறை அதனை வேறு வகையில் பயன்படுத்துவது என்று குஜராத்தின் சூரத் நகரை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் அரசு சாரா அமைப்பு ஒன்று முடிவு செய்தது.
இதன்படி, அந்த மண்பானைகளில் துளையிட்டு அவற்றை பறவைகள் தங்க கூடிய இல்லங்களாக மாற்றுவது என முடிவானது. அடுத்து மழை காலம் வரவுள்ள சூழலில், இதுபோன்ற மண்பானைகள் பறவைகளின் கூடுகளுக்கு மாற்றாக நன்மை சேர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த மண்பானைகளை வேறுவகையில் பயன்படுத்த முடிவு செய்து, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்று அந்த அமைப்பின் தலைவர் தர்மேந்திர சங்வி கூறியுள்ளார். இந்த மண்பானைகளை தனித்தன்மை வாய்ந்த வழியில், பறவை கூடுகளாக மாற்றும் பணியில் தன்னார்வலர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.