அதிகாலையில் கொட்டி தீர்த்த கனமழை: வெள்ளக்காடாக மாறிய மங்களூரு
|மங்களூரு நகரில் நேற்று அதிகாலையில் கனமழை கொட்டி தீர்த்ததால், நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது. இதனால் நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மங்களூரு;
தென்மேற்கு பருவமழை
கர்நாடகத்தில் இந்த மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை கோரத்தாண்டவமாடியது. இதனால் மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை கொட்டியது. குறிப்பாக கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் பேய் மழை பெய்தது.
இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மழை ஓய்ந்திருந்தது. இதனால் வெள்ளம் வடிந்து மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பி வந்த நிலையில், நேற்று அதிகாலை கனமழை கொட்டி தீர்த்துள்ளது.
வெள்ளக்காடானது
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நேற்று அதிகாலை திடீரென்று கனமழை கொட்டியது. சுமார் 3 மணி நேரம் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால் நகரில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. பல்வேறு இடங்களில் முட்டளவுக்கு மழை வெள்ளம் சென்றதால், மோட்டார் சைக்கிள்கள், கார்கள் தண்ணீரில் மிதந்தன.
கொட்டாரசவுக்கி, கொடியல்குத்து, கத்ரி, சென்டிரல் ரெயில் நிலையம், பம்ப்வெல், படீல் உள்ளிட்ட பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அட்டாவரில் பல கட்டிடங்களில் தரைதளங்கள் தண்ணீரில் மூழ்கின.
இதனால் மங்களூரு நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மங்களூரு சென்டிரல் ரெயில் நிலைய வளாகத்தில் மழை வெள்ளம் புகுந்தது. பம்ப்வெல்-படீல் சாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடினார்கள்.
பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
இதேபோல், மாவட்டத்தில் பண்ட்வால், புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
கனமழை காரணமாக மங்களூரு மாநகராட்சி எல்லை, புத்தூர், பண்ட்வால் ஆகிய பகுதிகளில் நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.