குஜராத்தில் பா.ஜனதா அபார வெற்றி: கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா?
|குஜராத்தில் பா.ஜனதா அபாரமான வெற்றியை பெற்றுள்ள நிலையில் கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு:
விரும்ப மாட்டார்கள்
குஜராத்தில் ஆளும் பா.ஜனதாவுக்கு அபாரமான வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி கிடைத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள பா.ஜனதா தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த வெற்றி இமாசல பிரதேசத்தில் அடைந்த தோல்வி கூட அக்கட்சியினரை கவலை அடைய செய்யவில்லை. இரு மாநிலங்களிலும் பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தால் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைந்து இருப்பார்களோ அந்த மகிழ்ச்சி குஜராத் தேர்தல் முடிவு ஒன்றே அவர்களுக்கு கொடுத்துவிட்டது என்று சொல்லலாம்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கர்நாடக சட்டசபையை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை சந்திக்கலாமா? என்று பா.ஜனதா தலைவர்கள் ஆலோசனையில் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்த சூழ்நிலையில் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை விரும்ப மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
முன்கூட்டியே தேர்தல்
ஒருவேளை இந்த மாத இறுதிக்குள் சட்டசபையை கலைத்தாலும் தேர்தலை நடத்தி முடிக்க 2 மாதங்கள் ஆகும். அப்படி என்றால் தேர்தல் பணிகளை முடிக்க பிப்ரவரி மாதம் ஆகிவிடும். அதன் பிறகு இந்த சட்டசபையின் பதவி காலம் முடிவடைய 2 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. அதனால் சட்டசபைக்கு முன்கூட்டியே நடத்துவதை பா.ஜனதா விரும்பாது என்று சொல்லப்படுகிறது.
ஆனால் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் என்று ஒரு தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.