கார்ப்பரேட் கடன்களை தள்ளுபடி செய்யும் வங்கிகள் - காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம்!
|கார்ப்பரேட்களின் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்யும் நடைமுறையை காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
சென்னை,
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம், கார்ப்பரேட்களின் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்யும் நடைமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
முன்பெல்லாம், வங்கிகள் கார்ப்பரேட் கடன்களை ஒருவித நடுக்கத்துடன் தள்ளுபடி செய்யும். ஏனெனில் வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகம் மூலம் கேள்விகள் கேட்கப்படும்.
ஆனால் இப்போது, கடன்களை தள்ளுபடி செய்தால் எவ்வித தண்டனையும் கிடைக்காது என்று வங்கிகள் ஐபிசி செயல்முறை மூலம் தயக்கமின்றி செய்கிறார்கள்.
வங்கிகள் கடனாளிகளின் குழுவில் ஒன்று கூடி ஆலோசனை செய்கிறார்கள். அதில்
ஒரு பெரிய தள்ளுபடியைக் கோரும் தீர்மானத் திட்டத்தை வங்கிகள் அங்கீகரிக்கிறார்கள்.இந்த தீர்மானத் திட்டம் என் சி எல் டிஆல் அங்கீகரிக்கப்பட்டவுடன், கார்ப்பரேட் கடனாளி அனைத்து கடன்களிலிருந்தும் விடுவிக்கப்படுவார்.
வங்கிகள் இதை "ஹேர்கட்" என்று அழைக்கின்றன. கடன் தொகையில் 69 சதவீதம் உள்ள, 517 வழக்குகளில் ஐபிபிஐ "ஹேர்கட்" கணக்கிட்டுள்ளது. அதன்படி, 517 வழக்குகளில் மொத்தம் கணக்கிடப்பட்டுள்ள "ஹேர்கட்" தொகை ரூ.5,32,000 கோடியாகும்.
அதாவது 517 வழக்குகளில் ரூ.5,32,000 கோடியை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன என்று கூறலாம். ஒரு வழக்குக்கு சராசரியாக ரூ.1000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதாக கணக்கில் கொள்ளலாம்!
ரூ.1000 கோடி செலவில் ஹேர்கட் செய்யப்பட்டதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.