ஆஸி. துணை பிரதமருக்கு கோலி 'ஆட்டோகிராப்' போட்ட பேட்டை பரிசாக வழங்கிய மத்திய மந்திரி ஜெய்சங்கர்
|வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், விராட் கோலி ஆட்டோகிராப் போட்ட பேட்டை ரிச்சர்ட் மார்லெஸுக்கு வழங்கினார்.
கான்பெரா,
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று கான்பெராவில் உள்ள போர் நினைவு சின்னத்தை பார்வையிட சென்று இருந்தார். அங்கு ஆஸ்திரேலியாவின் துணை பிரதமரும் ராணுவ அமைச்சருமான ரிச்சர்ட் மார்லெஸ், ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், விராட் கோலி ஆட்டோகிராப் போட்ட பேட்டை ரிச்சர்ட் மார்லெஸுக்கு வழங்கினார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரிச்சர்ட் மார்லெஸ், "ஜெய்சங்கர் அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களை பல விஷயங்கள் இணைத்துள்ளது.
அதில் கிரிக்கெட் மீதான எங்கள் காதலும் ஒன்று. கிரிக்கெட் ஜாம்பவான் கோலி கையொப்பமிட்ட பேட்டை பரிசளித்து ஜெய்சங்கர் என்னை ஆச்சரியப்படுத்தினார்" என தெரிவித்துள்ளார். அவரின் இந்த டுவிட்டர் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.